ஓட்டமாவடி பொது மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவங்களில் தரமற்ற முறையில் உணவுப்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற பொதுமக்களினதும் சமூக வலைத்தள முறைப்பாட்டையடுத்து மைதானத்திற்கு நேற்று (01/04/2025) இரவு திடீர் விஜயம் மேற்கொண்ட ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிரின் வழிகாட்டலில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரீக் தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர் அடங்கலான குழுவினர் பரிசோதனையில் ஈடுபட்டனர்.
ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எஸ்.ஏ.அமீர், மைதானம் அமைந்துள்ள பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் என்.எம்.எம்.ஷிஹான், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.நௌபர், சுகாதார பரிசோதகர்களான ஏ.ஆர்.ஹக்கீம், ஏ.எல்.எம்.நஸீர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன் போது முப்பத்தைந்து வர்த்தக நிலையங்கள் பரிசோதிக்கப்பட்டதுடன் இதில் ஆறு வர்த்தக நிலையங்களில் இருந்து பாவனைக்குதவாத பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதுடன் சுகாதார முறையிலான உடைகள் அணியாமலும் மருத்துவ சான்றிதழ் பெறப்படாமலும் இருந்த பதினேழு வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டதுடன் ஒருநாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.



