கிங்ஸ்ரன் தமிழ்ப் பள்ளியின் 39வது ஆண்டு விழா மார்ச் மாதம் 29ம் திகதி சனிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இவ்விழாவில் மாணவர்களது பேச்சு, பாடல்கள், சங்கீத இசை, நடனம், நாடகம், வயலின், வீணை, மிருதங்கம், கிட்டார், மற்றும் இசையும் கதையும் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
ITC தமிழ் நிலையம் – கிங்ஸ்ரன் தமிழ்ப் பாடசாலையின் தலைவர் கலாநிதி. சீவரத்தினம் ஜெகந்தன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவுக்கு சமூக மேம்பாட்டுக்கான நிலையத்தின் (centre for community development) தலைவர் மருத்துவக் கலாநிதி தேவகுஞ்சரி நாதன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். கிங்ஸ்ரன் நகர சபைத் தலைவர் (Leader of Kingston Borough Council) கவுன்சிலர் அன்ட்ரியாஸ் கேர்ஷ் (Councillor Andreas Kirsch) அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் ITC தமிழ் நிலையத்தின் முன்னாள் நிர்வாக உறுப்பினர் திரு. குழந்தைவேலு குகநேசன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் இடம்பெற்ற இந்நிகழ்விலே பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர், கௌரவ விருந்தினர் ஆகியோர் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்கள். அத்துடன் பாடசாலையில் நீண்டகாலம் பணியாற்றிய ஆசிரியர்கள், வருகைதந்த விருந்தினர்களால் பொன்னாடை போர்த்தப்பட்டு, நிர்வாகசபை உறுப்பினர்களால் நினைவுக்கேடயங்களும் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டார்கள்.
பிரதம விருந்தினர் மருத்துவர் கலாநிதி தேவகுஞ்சரி நாதன் அவர்கள், தனது உரையில் 1986-ம் ஆண்டு ஆரம்பமான கிங்ஸ்ரன் தமிழ்ப் பள்ளியின் ஆரம்ப நாட்களை நினைவு கூர்ந்து அது இன்று ஆலமரமாக வியாபித்திருப்பது பற்றியும், கிங்ஸ்ரன் தமிழ்ப் பள்ளிக்கும் தனக்குமான நெருங்கிய உறவைப் பற்றியும் சிலாகித்துப் பேசினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கவுன்சிலர் அன்ட்ரியாஸ் அவர்கள் கிங்ஸ்ரனில் பேசப்படும் மொழிகளில் தமிழ் இரண்டாவது இடத்தில் இருப்பது குறித்தும் கிங்ஸ்ரன் பிராந்தியத்திலே தமிழ் சமூகத்தின் பெரும்பங்களிப்பை பற்றியும் பெருமையுடன் பேசினார். அத்தோடு யாழ்ப்பாணமும் நியூமோல்டனும் துணை நகரங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட வரலாற்று முக்கியமான நிகழ்வையும் தனது உரையிலே மீட்டுப்பேசினார். ITC நிலையத்தின் தலைவர் கலாநிதி சீவரத்தினம் ஜெகந்தன் அவர்கள் தனது தலைமை உரையில், புலம்பெயர் நாடுகளில் வாழும் நாம் நமது அடுத்த தலைமுறைக்கு எமது தாய்மொழியையும், கலைகளையும், பண்பாட்டு விழுமியங்களையும் எடுத்துச் செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்தியம்பினார்.
பாடசாலை நிர்வாகத்தினால் சிறந்த முறையில் திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்ட இவ்விழாவில், ஆசிரியர்களின் நேர்த்தியான பயிற்றுவித்தலின்படி மாணவர்கள் தங்களது ஆற்றுகைகளை மிகவும் திறம்பட வெளிப்படுத்தியிருந்தார்கள். மேடையில் அனைவரையும் கவர்ந்த மாணவர்களது நாடகங்களும், நடனங்களும் பார்வையாளர்களது பலத்த வரவேற்பைப் பெற்றன.
இறுதியாக, நிர்வாக செயலாளர் திரு. சிவப்பிரகாசம் பிரணவரூபன் அவர்களது நன்றியுரையின்பின், பாடசாலை கீதத்துடன் விழா இனிதே நிறைவுபெற்றது.
கிங்ஸ்ரன் பிராந்தியத்திலே தமிழ்க் கல்வியையும், கலைகளையும் அடுத்த சந்ததிக்கு எடுத்துச்செல்லும் உயரிய பணியின் ஆணிவேராக 1986ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ITC தமிழ் நிலையம் ஆனது பிரித்தானிய அரசாங்க ஆணையத்தின் கீழ் தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டு அதன் கீழ் கிங்ஸ்ரன் தமிழ்ப் பாடசாலை, ITC Community Centre, KITC Sports ஆகியவை செயற்பட்டு வருகின்றன. வாரந்தோறும் தமிழ்மொழி வகுப்புக்கள் மற்றும் நுண்கலை வகுப்புக்கள் கிங்ஸ்ரன் தமிழ்ப் பாடசாலையில் மிகவும் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் குழாம் மூலம் நடாத்தப்பட்டு வருகின்றது.
அத்துடன் ITC Community Centre மூலம் வாராந்த யோகாசன வகுப்புகள் மற்றும் மாதாந்த சமூக விழிப்புணர்வு கருத்தரங்குகள், இலவச மருத்துவ முகாம் போன்றவை நடாத்தப்பட்டு வருகின்றன . KITC sports அமைப்பினால் வாரந்தோறும் வலைப்பந்தாட்டம் மற்றும் உதைப்பந்தாட்டப் பயிற்சிகள் நடாத்தப்பட்டு வருகின்றன.







