இன அழிப்பை மேற்கொண்டு வருகின்ற இஸ்ரேலின் செயற்பாடுகளை கண்டித்து ஸ்டிக்கர் ஒட்டியதன் அடிப்படையில் முகமது ருஸ்தி என்பவர் அண்மையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இச் செயற்பாடு இந்த அரசாங்கத்திடம் முஸ்லிம் சமூகம் வைத்திருந்த எதிர்பார்த்த எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் ஏமாற்றமானதாகும் என முன்னால் கிண்ணியா நகர சபை உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளருமான எம்.எம்.மஹ்தி தெரிவித்தார்.
கிண்ணியாவில் இன்று (30) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் தெரிவிக்கையில்
சர்வதேச ரீதியில் விமர்சிக்கப்பட்டு கொண்டிருக்கின்ற இஸ்ரேலானது இன அழிப்பை செய்கின்றது என்றும் எல்லைப்புற காணிகளை கபலீகரம் செய்கின்றது என்பதையும் சர்வதேச நீதிமன்றங்கள் தமது தீர்ப்பின் மூலமாக உறுதி செய்திருக்கின்றன.
அந்த அடிப்படையில் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட நெத்தன் யாஹுவை பிரதமராகக் கொண்ட இஸ்ரேலானது பலஸ்தீன் மற்றும் லெபனான் போன்ற நாடுகளில் இன அழிப்பை செய்து வருகின்றது என்பது உறுதி செய்யப்படுகின்றது.
அவ்வாறு இருக்கின்ற போது இலங்கையின் தற்போதைய அனுர குமார அரசை உருவாக்க இந்நாட்டு முஸ்லிம்கள் பாரிய பங்களிப்பினை செய்திருக்கின்றார்கள். இருந்த போதிலும் அப்பாவி இளைஞன் முஹம்மது ருஸ்தியை ஒரு ஸ்டிகர் ஒட்டியதற்காக கைது செய்து முதற்கட்டமாக பயங்கரவாத சட்டத்தின் கீழ் 90 நாட்களுக்கு சிறைப்படுத்தி இருப்பது கண்டிக்கத்தக்க ஒரு விடயமாகும்.
இதேபோன்றுதான் கோட்டா அரசாங்கத்தில் வேண்டுமென்று குற்றஞ் சாட்டப்பட்டு பல அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டார்கள். கவிஞன் அஹ்னாப் ஜெசீம், ஹிஜாஸ் ஹிஸ்புள்ளா, வைத்தியர் ஷாபி சிஹாப்தீன், ஹஜ்ஜுல் அக்பர், ஆசாத் சாலி, ரிஷாட் பதியுதீன் போன்று பலர் அநியாயமாக கைது செய்யப்பட்டார்கள்.
கைதுகள் அனைத்தும் முஸ்லிம் சமூகத்தின் மீதான பலி வாங்குகின்ற ஒரு நடவடிக்கையாகவே அரங்கேற்றப்பட்டன. ஏனென்றால் இச்சம்பவங்கள் குறித்து நீதிமன்றத்திலே வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நடைபெற்ற வாத பிரதிவாதங்கள் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படாமல் ஒவ்வொருவராக குற்றமற்றவர்கள் என்ற தீர்ப்பு வெளியாகிக் கொண்டிருக்கின்றது.
ஆகவே மேற்குறித்த கைதுகள் அனைத்துமே முஸ்லிம் சமூகத்தின் மீதான இனவெறி செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது.
அதேபோன்றுதான் தற்போது அதிகமான முஸ்லிம்களின் வாக்கு பலத்தினால் தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார அரசும் உண்மையாக ஏற்றுக்கொள்ளக் கூடிய குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் வேண்டுமென்றே முகம்மது ருஷ்தி அநியாயமாக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது தெட்டத் தெளிவாக புலப்படுகின்றது.
எனவே இந்நாட்டின் ஜனாதிபதி அவர்கள் சட்டமா அதிபரின் கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு வருவதன் மூலம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி உடனடியாக அந்த இளைஞனை விடுதலை செய்ய நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கையை இந்நாட்டு முஸ்லிம்கள் சார்பாகவும் ஜனநாயகத்தை விரும்புகின்ற மனிதாபிமான சக்திகளின் சார்பாகவும் இந்த அரசாங்கத்திடம் முன்வைக்கின்றேன் என்றார்.