மியன்மார்-தாய்லாந்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மண்டலே நகரை மையமாக கொண்டு நேற்று காலை 11.50 மணிக்கு ரிச்டர் அளவில் 7.7 ஆக நிலநடுக்கம் உண்டானது.
பின்னர் 12 நிமிடம் கழித்து மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் (ரிச்டர் அளவு 6.4) ஏற்பட்டது. அதே அளவுக்கு அண்டை நாடான தாய்லாந்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து நிலஅதிர்வுகள் உண்டானது. கட்டடங்கள் பல தரைமட்டமாகின.
இன்று காலை மியான்மரின் இராணுவ ஆட்சிக்குழு வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1002 பேர் பலியாகி உள்ளதாகவும் 2376 பேர் காயம் அடைந்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் மியன்மாரில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மாலை 04.30 மணியளவில் மியன்மாரில் மீண்டும் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. மாண்டலே நகரை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக ஆப்கானிஸ்தானிலும் இன்று அதிகாலை 4.7 ரிச்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது