இரா.மேரியன் அவர்களின் கவிக்கோர்வையின் மூன்றாவது பரிணாம வளர்ச்சியே கரைதொடும் அலைகள் எனும் கவிதை நூலாகும். ஓய்வின்றி தொடர்சியாக கரையை நனைப்பதற்காக அனுதினமும் ஓடோடிவந்து தொட்டுச்செல்கிறது அலைகள். கரையின் மீது அளப்பெரிய அன்பு வளர்ந்துள்ள காரணத்தாலேயே தன்னை பின்னோக்கி கடல் இழுத்தாலும் பாய்ந்து வந்து கரையை தொட்டுக் கொண்டே செல்கிறது அலைகள்.
அவ்வாறே கவி மீது காதல் கொண்ட கவிஞர் பெண், சமூகம், முயற்சி, அன்பு, உலகம், இயற்கை, தமிழ் போன்ற பல விடயங்களை ஓடங்களாக தாள்களில் ஓடவிட்டுள்ளார். பெண் மீதான ஆணின் அன்பும் காதலும் அழகுறப் பேசும் வார்த்தைகளும் கவிஞர் நாவில் பொழிந்து கிடக்கிறது. அதில் பெரும்பாலான கவிதைகள் தமிழையும் கெளவிச் செல்கிறது.
“தங்கத் தாமரையே
பைந்தமிழ்க் கிளியே
எந்த நிலை வந்தாலும்
என்னுடனே இணைந்திடடி ”
காதலைக் கவியாக கடத்துவது இயல்பான மொழியழகு ஆனால் காதலை கவியாகவும் உரைநடையிலும் பொருத்தி கள்ளப்பார்வை போன்று கவிதைகளையும் பெண் மீதான ரசனையினையும் கள்ளத்தனமாக களவாடி கைநனைக்கும் கவிஞர் இரா.மேரியன் காதலை அள்ளித் தின்றிருப்பார் போல தோன்றுகிறது.
ஆண் :- அடி வள்ளிக் கிழங்கே
இனிக்குற செங்கரும்பே
தேனான சேதி சொல்லிப்புட்ட
ஓடோடி வந்திடுறேன் …….
பெண் :- நல்லாத்தான் பாடுற மச்சான்
ஆசையத்தான் ஏமேல வச்சான்
எங்காத்தா கோயிலுக்கு
போயிருவா மச்சான் ……
உலகம் அன்பால் பிணைக்கப்பட்டு கட்டிப் புறளுக்கிறது. அன்பில்லா நெஞ்சம் எவரிடமும் கிடையாது என்பது வாழ்வின் புரிதலாகும். காதல் செய்ய கற்றுக்கொள்ளுங்கள், காதல் காதலாக இருக்கும் வரை காதல் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்.
இரா.மேரியனின் வர்ணனையும் அன்பும் என்றும் ஓயாமல் அலைகளாக கரையினை அடித்துக்கொண்டே இருக்கட்டும்.
எழுத்தாளர்,
விமர்சகர்,
-ஆதன் குணா -.

