உள்ளூராட்சி மன்றங்களால் அறவிடப்படும் வரிப்பணம் நிரந்தர வைப்புக்கானது அல்ல. அது மீள மக்கள் நலத் திட்டங்களுக்காக சென்றடைய வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் வவுனியா அலுவலகத்தில் இன்று (27.03) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தல் இலங்கை முழுவதும் நடைபெற இருக்கின்றது. இதில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பலத்துடன் மன்றங்களை கைப்பற்றும் என்ற நம்பிக்கை எங்களிடம் இருக்கிறது. பொதுமக்கள், புத்திஜீவிகள் ஆகியோருடன் கலந்துரையாடும் போது அவர்களது கருத்துக்களை பெற முடிகிறது. குறிப்பாக வடமாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றும் என்ற எண்ணம் எங்களிடத்தில் உள்ளது.
வன்னி மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும். மக்களும் அதற்கான ஆதரவை எங்களுக்கு வழங்குவார்கள் என நம்புகின்றோம். கடந்த காலங்களில் உள்ளுராட்சி மன்றங்களை கைப்பற்றிய கட்சிகள் உள்ளுராட்சி மன்றங்களை எவ்வாறு நடத்திச் சென்றார்கள் என்பது கேள்விக் குறியாகவுள்ளது.
வவுனியா மாநகர சபையை கைபற்றியவர்கள் பல உட்கட்டமைப்பு வசதிகள், மக்கள் நலன்னோம்பு திட்டங்களை செய்ய வேண்டிய தேவைகள் காணப்பட்ட போதிலும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு மக்கள் கஸ்ரப்பட்டு செலுத்தும் வரியை நிரநதர சேமிப்பில் வைத்து வர்த்தக வங்களின் போலான செயற்பாட்டை செய்து வந்தது ஒரு வேதனைக்குரிய விடயமாகும். அது பிழையான செயற்பாடு.
மக்களிடம் வரிப்பணமாக அறவிடப்படும் பணம் மீண்டும் மக்களுக்கே சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். கடந்த காலங்களில் ஏற்பட்ட தவறுகளை திருத்தி மக்களது வரி, மக்களது வாடகை, பெறப்படுகின்ற முற்பணம் அது மக்களுக்கே மீளச் சென்று அவர்களது நலத் திட்டங்களை செயற்படுத்தும் வகையில் நாம் அவற்றை செயற்படுத்துவோம்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பாக அறிய முடிகிறது. அது குறித்து நடவடிக்கை எடுப்போம். தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவு பாராளுமன்ற தேர்தலை விட அதிகரித்துள்ளது. அடுத்து வரும் 5 வருடங்களில் மக்களாட்சி இடம்பெறும். ஊழல் ஒழிக்கப்படும். ஊழல்கள், மோசடிகள் விசாரிக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்படும். இதனை எதிர்காலத்தில மக்கள் காணக் கூடியதாக இருக்கும் எனத் தெரிவித்தார்.