தமிழர்களது விவகாரத்தில் ஜேவிபியினரும் யுத்த குற்றவாளிகளே நாட்டை ஆண்டவர்கள் அனைவருமே குற்றவாளிகளாக இருக்கின்ற காரணத்தினால் தமிழர்களை பொறுத்தளவில் எங்களுடைய விவகாரங்களை சர்வதேச குற்றவியல் விசாரணை நீதிமன்றத்தின் ஊடாக அல்லது சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாக மாத்திரம் தான் நீதி பெற்றுக் கொள்ள முடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.
தியாக தீபம் அன்னை பூபதியின் 37வது நினைவை முன்னிட்டு மட்டக்களப்பு நாவலடி பகுதியில் அமைந்துள்ள அன்னாரினது சமாதியில் இன்று (27) காலை அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மட்டக்களப்பு நாவலடி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள தியாகி அன்னை பூபதியின் நினைவு இல்லத்தில் நடைபெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட சிலர் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இதன்போது தியாகி அன்னை பூபதியின் சமாதியில் ஈகைச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டு அன்னை பூபதியின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
மட்டக்களப்பில் இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக 1988ம் ஆண்டு மார்ச் மாதம்19 ம் திகதி முதல் சாகும் வரை உண்ணாநிலையிருந்து 1988ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ம் திகதி உயிர் நீத்துக் கொண்டவராவர்.
இந் நிகழ்வில் அன்னை பூபதியின் குடும்பத்தனர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் அரசியல் பிரமுகர்கள் என கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த கஜேந்திரன்,
அன்னை பூபதி தமிழ் மக்களது நிம்மதியான வாழ்க்கைக்காக அரசியல் விடுதலைக்காக தமிழர்களுடைய தேசம் அங்கீகரிக்கப்பட்ட தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதற்காக 37 ஆண்டுகளுக்கு உண்ணா நோன்பு இருந்து தன்னுடைய உயிரை தியாகம் செய்து உயர்ந்த உன்னதமான ஒரு தாய்.
அவருடைய 37வது ஆண்டு ஒன்பதாவது நாள் நினைவேந்தல் நிகழ்விலே நாங்கள் கலந்து கொண்டு இருக்கின்றோம். 37 வருடங்களுக்கு முன்னர் இந்த தீவிலே தமிழ் மக்களுக்கு ஒரு நிம்மதியான தீர்வை பெற்று தருவோம் என கூறி இந்திய படைகள் கால் வைத்தது. இந்திய அரசு தமிழ் மக்களின் பெயரால் ஒப்பந்தம் ஒன்றை இலங்கை அரசுடன் செய்து கொண்டது. அதற்கு இலங்கை இந்தியா ஒப்பந்தம் என பெயர் வைக்கப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதாக கூறி தமிழ் மக்களுடைய சுய நிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட ஒரு அடிப்படையில் சமஸ்டி தீர்வை பெற்று தருகின்றோம் எனக்கூறி இந்த மண்ணிலே காலடி எடுத்து வைத்த இந்திய படைகள் இங்கு வந்ததன் பிற்பாடு அவர்களுடைய நலன்கள் சார்ந்த விடயங்கள் அங்கீகரிக்கப்பட்ட நிலைமையில் அதாவது இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்த மூலம் இந்தியாவினுடைய தேசிய பாதுகாப்பு நலன்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இந்தியா தமிழர்களை முற்றாக கைவிட்டு தமிழர்கள் ஒற்றை ஆட்சிக்குள் ஜே.ஆர் தருகின்ற தீர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற தீர்மானத்தை எடுத்த போது அதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழர்கள் தொடர்ந்தும் உரிமைக்காக உறுதியாக நின்ற தருணத்தில் இந்திய படைகளே எங்களுக்கு எதிராக ஒரு யுத்தத்தை ஆரம்பித்தார்கள்.
அப்போது தமிழ் இளைஞர் யுவதிகள் வகை தொகையாக கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு தமிழர்கள் இந்திய ராணுவத்தினரால் படுகொலை செய்யப்படுவதும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு மண்ணைச் சேர்ந்த அன்னை பூபதி அவர்கள் அன்று இருந்த அன்னையர் முன்னணி என இருந்த மிக தீவிரமான செயற்பாட்டல்களில் ஒருவராக இருந்த அன்னை பூபதி அம்மா அவர்கள் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி இந்தியா படைகள் யுத்தத்தை நிறுத்தி கொலைகளை நிறுத்தி உடனடியாக விடுதலைப் புலிகளுடன் பேசி தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு மாமாங்க கோயில் முன்றலில் ஒரு உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.
பல பிள்ளைகளுக்கு தாயாக இருந்த போதும் ஒட்டுமொத்த தேசத்தையும் அவர் தன்னுடைய உயிராக நேசித்து தேசத்தின் உடைய பிள்ளைகள் அனைவரையும் தன்னுடைய பிள்ளைகளாக நேசித்த ஒரு தாய் கொலைகள் சித்திரவதைகளை கண்டு கொள்ள முடியாமல் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அந்த உண்ணாவிரத போராட்டத்தில் குதித்து இருந்தார்.
1988 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 19ஆம் தேதி அவர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வரையான 31 நாட்கள் உணவு ஏதும் உட்கொள்ளாமல் நீர் மாத்திரம் அருந்தி அந்த உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி இருந்தார் அணு அணுவாக அவர் தன்னை வருத்தி இந்த தேசத்து மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக அந்த உண்ணாவிரத போராட்டத்தை நடத்திய போதும் இந்திய படைகள் இந்திய அரசும் அதனை கண்டு கொள்ளவில்லை.
இந்திய அரசு அயல்நாடு ஆனால் இலங்கை அரசு கூட அன்னையின் உயிரை பாதுகாப்பதற்கு எது விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை. இரண்டு அரசுகளும் கூட்டாக சேர்ந்து தமிழர்களது கோரிக்கையை புறக்கணித்ததன் ஊடாக 31 வது நாள் அன்னையின் உயிர் பிரிந்தது.
அவர் உயிர் பிரிந்து இன்றோடு 37 வருடங்கள் ஆகிவிட்டது ஒன்பதாவது நாளில் நாங்கள் நின்று கொண்டிருக்கின்றோம் இன்று வரைக்கும் அவருடைய கோரிக்கைகள் வடக்கு கிழக்கு தாயகத்தில் தமிழர்கள் மீதான ஒடுக்கு முறைகள் நிறுத்தப்பட்டு தமிழர்களுடைய தேசம் அங்கீகரிக்கப்பட்டு தமிழர்களுடைய சுயநிர்ணய அடிப்படையில் ஒரு சுயாட்சி வேண்டும் என்ற நிலைப்பாடு இன்னமும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை மாறாக தொடர்ந்தும் வாழ்விடங்கள் கபளிகரம் செய்யப்படுவதும் தமிழர்கள் சொந்த இடங்களில் இருந்து விரட்டி அடிக்கப்படுவதும் தமிழர்களது பொருளாதார ஆதிக்கம் படித்தடுக்கப்படுவதும் தமிழர்களது கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் அழித்தொளிக்கப்படுவதும் தொடர்ச்சியாக இடம்பெற்று கொண்டிருக்கின்றது.
தமிழர்களுடைய கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டு தமிழ் சமூகத்தை முற்றாக சீரழிக்கின்ற போதைப் பொருளுக்கு சமூகத்தை அடிமையாக்கி வன்முறை வாள்வெட்டு கலாச்சாரங்களுக்குள் தள்ளி எங்களுடைய சமூகத்தை முழுமையாக கரைத்தொளிக்கின்ற செயற்பாடுகள் தீவிரமடைந்து கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் நாங்கள் அன்னையினுடைய தியாகங்களை நினைவு கூறுவதன் மூலம் அன்னை எங்களுடைய தேசத்திற்காக செய்த தியாகத்திற்காக நன்றி தெரிவிக்கின்ற அதே தருணத்தில் அந்த அன்னையின் லட்சியம் நிறைவேற்ற வேண்டுமாக இருந்தால் அவருடைய இலட்சிய பாதையிலே உறுதியாக பயணிக்க வேண்டும். அந்த வகையிலே அன்னையினுடைய இலட்சியத்தை நாங்கள் முன் கொண்டு செல்லுவோம் எப்போதும் அதனை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதனை உறுதிப்பட கூறிக் கொள்கின்றோம்.
அந்த வகையில் அன்னையினுடைய இலட்சியங்கள் நிறைவேறுமாக இருந்தால் எங்கள் மீது நடைபெற்ற இனப் படு கொலைக்கு ஒரு சர்வதேச குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதுடன் இன பிரச்சனைக்கு தீர்வாக ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட சகல வடிவிலான தீர்வு முயற்சிகளையும் நாங்கள் நிராகரிக்கின்றோம்.
குறிப்பாக 13ம் திருத்தச் சட்டத்தை நிராகரிக்கின்றோம், 2017 செப்டம்பர் 21 ஆம் தேதி ரணில் மைத்திரி அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட புதிய அரசியல் வரைபானது அதனையும் நாங்கள் நிராகரிக்கின்றோம், அதே நேரத்தில் 1951 ஆம் ஆண்டு தமிழரசு கட்சி திருவண்ணாமலை மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களில் அடிப்படையில் தமிழர்களுடைய தேசம் சுயநிர்ணயம் உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஸ்டி என்ற அடிப்படையிலான அரசியல் தீர்வுகளுக்காக நாங்கள் தொடர்ந்தும் செயலாற்றுவோம்.
அந்த அடிப்படையிலான வரைபு ஒன்று தமிழ் மக்கள் பேரவையினால் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. அந்த தீர்வை அடைவதற்காக நாங்கள் அர்ப்பணிப்போடு நேர்மையாக பயணிப்போம் என்பதனை இந்த இடத்திலேயே உறுதிப்பட தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதன் மூலமாக மாற்றம் தான் தென் தமிழீழ தேசமாக இருக்கலாம் அல்லது வட தமிழீழ தேசமாக இருக்கலாம் எங்களுடைய மக்களுடைய ஏழ்மையை போக்கி மக்களுடைய காணி உறுதிகளை உறுதிப்படுத்தி அவர்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்தி அவர்களுடைய கல்வியை மேம்படுத்தி அவர்களுடைய சகல எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்து பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்குரிய ஒரு சூழலை நாங்கள் உருவாக்கிக் கொள்ள முடியும்.
அதற்காக நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அரசியல் பேதங்களைக் கடந்து இந்த லட்சியத்திற்காக நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
இந்த விடயம் தொடர்பாக முற்று முழுதாக சிங்கள இளைஞர் யுவதிகளுக்கு எதிராக இடம்பெற்ற ஒரு சம்பவம் அதனை அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தின் காலப்பகுதியில் ரணில் விக்ரமசிங்க அமைச்சராக இருந்தபோது அந்த படு கொலையோடு அவருக்கு சம்பந்தப்பட்டதாக குற்றச்சாட்டு ஆணைகுழு மூலமாக வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றது.
அந்த பட்டலந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 90 வீதமானவர்கள் ஜே.வி.பி உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்களாகவே இருக்கிறார்கள். அவ்வாறான நிலைமையில் இவர்கள் இன்று ஆட்சி பீடம் ஏறி இருக்கின்ற நிலையில் இந்த சம்பவங்களுக்கு தங்களுக்கு இருக்கக்கூடிய தங்களுடைய அரச கட்டமைப்பின் ஊடாக நீதி பெறக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. அவர்கள் நேர்மையாக செயல்பட்டார்களாக இருந்தால். நிச்சயமாக நடைபெற்ற அந்த அநீதிகளுக்கு நீதி கொடுக்கப்பட வேண்டும்.
அதே நேரத்தில் அதற்கு எதிராக இன்று நாடாளுமன்றத்தில் இவ்வளவு குரல்கள் எழும்புகின்றது. அவர்கள் ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்திருக்கின்றார்கள் என்பதற்காக ஊடகங்கள் அந்த சம்பவங்களை உண்மை தன்மையாக வெளிப்படுத்துகின்றது என்பதற்காக அவர்கள் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எதிராக இடம் பெற்ற விடயங்களை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப் போவதும் இல்லை அதைப்பற்றி பேசப்போவதுமில்லை. அவ்வாறு விவாதங்கள் இடம்பெற்றாலும் கூட ஒரு பொழுதும் குற்றவியல் நடவடிக்கைகள் மூலமாக தண்டனைகள் வழங்கப்பட போவதில்லை.
ஆகவே ஊடகங்கள் கூட அந்த சம்பவங்களை பூரணத்துவத்துடன் வெளிப்படுத்த போவதில்லை பட்டலந்தையில் இடம் பெற்ற சித்தர வதைகள் தொடர்பாக ஊடகங்களில் வெளிவருகின்ற போது மிகவும் ஒரு பயங்கர கோபம் வருகின்றது. இவர்களுக்கு எப்படியாவது தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று இந்த சம்பவங்களுடன் ஒப்பிடுகின்ற போது வடக்கில் 50 – 60 ஆண்டுகளாக சிங்கள பௌத்த பேரணவாதிகள் தமிழ் மக்களுக்கு எதிராக சம்பவங்களை ஆய்வு செய்து அடக்கிடுவார்களாக இருந்தால் நான் நினைக்கின்றேன் 30 வருடங்கள் ஊடகங்கள் தொடர்ச்சியாக அந்த கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்க முடியும் அந்த அளவிற்கு கொடூரங்கள் நடைபெற்றிருக்கின்றது.
அந்தப் வகையில் பட்டலந்த விடயத்திற்கு கட்டாயமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கொடுக்கப்பட வேண்டும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. ஆனால் தமிழர்களை பொறுத்தளவில் எங்களுடைய விவகாரங்களை சர்வதேச குற்றவியல் விசாரணை மூலமாக நீதிமன்றத்தின் ஊடாக அல்லது சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாக மாத்திரம் தான் நீதி பெற்றுக் கொள்ள முடியும். ஏனென்றால் தமிழர்களது விவகாரத்தில் ஜே.வி.பியினரும் யுத்த குற்றவாளிகளே நாட்டை ஆண்டவர்கள் அனைவருமே குற்றவாளிகளாக இருக்கின்ற காரணத்தினால் ராணுவ தரப்பில் இருந்த அனைத்து ராணுவ தளபதிகளும் இனப்படுகொலைக்கு சம்பந்தப்பட்டவர்களாக இருக்கின்ற காரணத்தினால் தமிழர்களுக்கு எதிரான இந்த விடயத்தில் ஒருபோதும் உள்ளக பொறிமுறை மூலம் தீர்வு கிடைக்காது. எங்களுக்கு சர்வதேச நீதிமன்ற பொறிமுறையின் ஊடாகத்தான் நீதி கிடைக்கும் என்பது நமது கருத்து.





