வெளிவிவகார அமைச்சரின் கருத்தானது சிவப்பு கட்சியை சேர்ந்த தேசிய மக்கள் சக்தியினரும் மனித உரிமைக்கு எதிராக செயற்பட்டவர்களை அல்லது மனித பேரவலத்தை ஏற்படுத்தியவர்களை பாதுகாக்க கூடிய விதத்தில் செயல்படுகிறார்கள் என்பது புலனாவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழு பேச்சாளருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.
மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
பிரித்தானிய அரசு 4 நபர்களுக்கு எதிராக அதாவது ராணுவ படையினை சேர்ந்தவர்கள் மூவர் மற்றும் கருணா என்று அழைக்கப்படும் முரளிதரன் ஆகியோருக்கு எதிராக பிரித்தானிய அரசு பயண தடையினை விதித்து இருக்கின்றது.
அந்த வகையில் பார்க்கின்ற போது யுத்தம் முடிவுற்று 16 வருடங்களுக்குப் பின்னர் பிரித்தானிய அரசு மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித பேரவளத்தை ஏற்படுத்தியவர்கள் என்பதன் அடிப்படையில் இந்த தடையை விதித்து இருப்பதாக நாங்கள் அறிகின்றோம்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் நான்காயிரம் நாட்களுக்கு மேல் அதிகமாக போராடிக் கொண்டிருக்கின்றார்கள் தங்களுடைய உறவுகளை தேடிக் கொண்டிருக்கின்றார்கள் அந்த அடிப்படையில் பார்க்கின்ற போது மனித உரிமை பேரவளம் இடம் பெற்றிருக்கின்றது. மனித உரிமை மீறப்பட்டு இருக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள் இந்த அடிப்படையில் உள்நாட்டு பொறிமுறை மூலமாக இவற்றையும் கண்டுகொள்ளாத நிலையில் பிரித்தானிய அரசு இந்த நால்வருக்கு எதிராக தடையினை ஏற்படுத்தி இருக்கின்றது என்ற விடயம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சம்பந்தமாகவும் பாதிக்கப்பட்ட உறவுகள் சம்பந்தமாகவும் பார்க்கின்ற போது அவர்கள் இந்த விடயத்தை வரவேற்கும் நிலையில் காணப்படுகின்றார்கள்.
காலம் கடந்தாவது இவ்வாறானதொரு ஒலிக்கீற்று கிடைத்திருக்கின்றது என்பது அவர்களுடைய எண்ணமாக இருக்கின்றது. இந்த விடயம் சம்பந்தமாக இலங்கை அரசு என்ன சொல்லப் போகின்றது என்று நாங்கள் அவதானித்துக் கொண்டிருந்தோம் அந்த நிலையில் வெளியுறவு அமைச்சராக இருக்கின்ற விஜித ஹேரத் அவர்கள் கூறியிருக்கின்றார் பயண தடை என்பது ஒரு தலைப்பட்சமான பயண தடை என்று கூறியிருக்கின்றார்.
நாங்கள் சொல்லக்கூடியது என்னவென்றால் நீங்கள் உள்நாட்டு பொறிமுறை மூலமாக இந்த அரசு 77 ஆண்டுகளாக நீங்கள் வந்து ஆறு மாதங்களாக இந்த விடயங்கள் பற்றி நீங்கள் எதுவும் பேசாமல் கதைக்காமல் இருக்கின்ற போது வெளியில் இருக்கின்ற ஒரு அரசு பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பாக நான்கு பேருக்கு எதிராக பயண தடையினை விதித்திருக்கின்றது என்பது தமிழ் மக்களை பொறுத்த அளவில் அது ஏற்றுக்கொள்ளக்கூடிய பெருவிடயமாக அமைந்திருக்கின்றது.
இந்த அரசாங்கங்கள் கடந்த காலத்தில் என்ன செய்திருக்கின்றது என்றால் மனித உரிமை மீறல்களை செய்தவர்கள் மனித பேரவலத்தை ஏற்படுத்தியவர்கள் அல்லது காணாமல் ஆக்கப்பட்ட போன்ற பல்வேறுபட்ட நிகழ்வுகளுக்கு சம்பந்தமாக இருக்கின்றவர்களுக்கு பதவி உயர்வுகளை வழங்கி இருக்கின்றார்கள்.
உண்மையில் பார்க்கப் போனால் கடந்த காலத்தில் இறுதி யுத்தத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகின்ற தளபதிகள் முப்படை தளபதிகளாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். ராணுவ தளபதிகளாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள், கடற்படை தளபதிகளாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள், ஆளுநராக கூட நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்று சொன்னால் குற்றம் இழைத்தவர்களுக்கு பதவி உயர்வு கொடுக்கின்ற போக்கினை இந்த அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது. கடந்த காலத்தில் இருந்து இந்த நடைமுறையை பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாவது இந்த விடயத்தில் கவனம் செலுத்துமோ என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற போது வெளியுறவு அமைச்சர் கூறி இருக்கின்றார் இந்த பயண தடையை ஏற்படுத்தியது ஒருதலைப்பட்சமான முடிவு இதனை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என கூறியிருக்கின்றார் என்றால் இந்த சிவப்பு கட்சியை சேர்ந்த தேசிய மக்கள் சக்தியினர் மனித உரிமைக்கு எதிராக செயற்பட்டவர்களை அல்லது மனித பேரவளத்தை ஏற்படுத்தியவர்களை பாதுகாக்க கூடிய விதத்தில் செயல்படுகிறார்கள் என்பது புலனாகின்றது.
எனவே சிங்கள தலைமைகள் என்பது நீலக் கட்சியாக இருந்தால் என்ன பச்சைக் கட்சியாக இருந்தால் என்ன சிவப்பு கட்சிகளாக இருந்தால் என்ன தமிழ் மக்கள் தொடர்பாக மனித உரிமைகளை மீறியவர்களுக்கு தண்டனை வழங்குகின்ற விடயத்தை விடுத்து அவர்களை பாதுகாக்கின்ற விடயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை அண்மையில் வெளிவிவகார அமைச்சர் கூறிய கருத்திலிருந்து நாங்கள் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
யுத்தத்தை நடாத்திய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்சே போன்றவர்களின் காலத்தில் குற்றம் இழைத்தவர்கள் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கின்றது என்பது வெளிப்படையான உண்மையாக தெரிகின்றது. ஏனென்றால் பிரித்தானியா பயண தடை விதித்தவர்களுக்கு இங்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டிருப்பது என்பது வெளிப்படையாக தெரிகின்றது.
அதுமட்டுமல்லாமல் முன்னாள் ஜனாதிபதி ஒரு கருத்தை வெளியிட்டு இருக்கின்றார். மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யுத்தத்தை நடாத்தியவர் அல்லது தீர்மானங்களை எடுத்தவர் நான் என்று கூறுகின்றார். அந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்தியவர்கள் தான் இந்த தளபதிகள் என்று கூறுகின்றார். ஆகவே இந்த தளபதிகள் செய்து இருக்கின்ற அனைத்துக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உரிமை கூறுகின்றார்.
ஆகவே இந்த யுத்தத்தில் விளைவாக மன்னார் பேராயர் ராயப்பு யோசப் குறிப்பிட்டு இருக்கின்றார். ஒரு லட்சத்து 46 ஆயிரம் மக்கள் காணாமலாக்கப்பட்டும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்கின்ற கருத்தை கூறி இருக்கின்றார் வேறு அறிக்கையில் அது 46 ஆயிரம் ஆகக் கூறப்பட்டிருக்கின்றது. அரசு சார்பான அறிக்கையிலும் கூட ஆயிரக்கணக்கான நபர்கள் கொல்லப்பட்டு இருக்கின்றார்கள் என்று கூறுகின்ற போதும் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்சே அவர்கள் கூறுகின்ற கருத்தின் படி தீர்மானங்களை எடுத்தவர் தான் நடைமுறைப்படுத்தியவர்கள் தான் படையினர் ஆகவே அங்கு நடைபெற்றிருக்கின்ற விடயங்களுக்கு தான் ஒரு பொறுப்பு எடுப்பது போன்று கூறி இருக்கின்றார்.
நடைபெற்ற யுத்தம் தமிழர்களுக்கு எதிரான யுத்தம் அல்ல பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என கூறுகின்றார். ஆகவே இந்த அப்பாவி மக்கள் அனைவரும் காணாமல் ஆக்கப்பட்டும் கொல்லப்பட்டு இருப்பதையும் எடுத்துக் கொண்டால் இவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று சொல்வதற்கு முன்னாள் ஜனாதிபதி முனைகின்றார் போல தெரிகின்றது.
எனவே இந்த அரசாங்கத்திலும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது இந்த உள்நாட்டு பொறிமுறை மூலமாக அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்த்தால் அவர்களுடைய உள்நாட்டு பொறிமுறையும் குற்றம் இழைத்தவர்களை பாதுகாக்கின்ற ஒரு பொறிமுறையாக இருந்து வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
எனவேதான் நாங்கள் ஒட்டுமொத்தமாக தமிழ் தேசிய அமைப்புகள் தமிழ் தேசிய கட்சிகள் கூறுகின்ற விடயம் இந்த நாட்டில் இருக்கின்ற உள்நாட்டு பொறிமுறை என்பது சிங்கள மக்களுக்கு சாதகமாக அல்லது சிங்கள ராணுவத்தினருக்கு சாதகமாக இருந்து கொண்டிருக்கின்றது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சாதகமாக எதுவும் இல்லை என்பதனை தான் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
அண்மையில் பயண தடை விதித்தவர்களை கூட அவர்கள் கடந்த காலத்தில் பதவி உயர்வுகள் கொடுத்திருக்கின்றார்கள். ஏன் கருணா அவர்களுக்கு கூட பிரதி அமைச்சர் பதவி கொடுத்திருக்கின்றார்கள். எனவே பாதிக்கப்பட்ட மக்களின் சார்பான பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் நாங்கள் கூறுவது உள்நாட்டு வழிமுறை என்பது ஒரு இயலாத பொறிமுறை என்பதனை நாங்கள் விளங்கிக் கொள்கின்றோம். பிரித்தானிய அரசு செய்த அந்த தடை என்பது ஒரு வெளிநாட்டு ரீதியான பார்வை இதுபோன்ற பொறிமுறைகளைதான் மற்றைய நாடுகளும் மேற்கொள்ளும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
இப்போது ஊடகவியலாளராக இருக்கின்ற தயான் அவர் குறிப்பிட்டு இருக்கின்றார் என்னவென்றால் ஹரி ஆனந்த சங்கரி அவர்கள் மூலமாகத்தான் இவ்வாறான தடைகள் விதிக்கப்படுகின்றது என கூறி இருக்கின்றார். ஆனால் அவர் கனடாவில் ஒரு நீதி அமைச்சராக இருக்கின்றார். பிரித்தானியா தான் தடையை விதித்து இருக்கின்றது. எனவே இரண்டையும் எவ்வாறு தொடர்புபடுத்துகின்றார் என்பது எனக்கு தெரியவில்லை.
இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பிரசாந்தன் அவர்களின் ஊடக சந்திப்பிற்கான பதில் கூறும் விதமாக பல விடயங்களை இதன் போதும் முன் வைத்தார், அவர் அந்த ஊடக சந்திப்பில் அனைத்தும் பொய்யான கருத்துக்களையும் முன் வைத்திருக்கின்றார். முதலாவது விடயமாக அவர் கூறியிருக்கின்றார் நான் நீதிமன்றத்தை கொச்சைப்படுத்தி இருக்கின்றேன் என கூறி இருக்கின்றார்.
அண்மையில் அச்சு ஊடகமாக இருக்கலாம் இலத்திரனியல் ஊடகமாக இருக்கலாம் இந்த ஊடகங்களில் வெளிவந்த கருத்துக்களை தான் நான் முன்வைத்தேன். நீதிமன்ற தீர்ப்பு நடைபெற்றதன் பின்னர் ஊடகங்களில் குறிப்பிடப்பட்ட வாசகங்கள் பிள்ளையான் குழுவை சேர்ந்த நான்கு நபர்களுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இருக்கின்றது என்று ஊடகங்கள் வாயிலாக இந்த செய்திகள் வெளிப்படையாக கூறப்பட்டன அந்த கருத்துக்களைத்தான் நான் குறிப்பிட்டு இருந்தேன்.
கற்பித்தவர்கள் மறந்தாலும் கற்றவர்கள் மறக்க மாட்டார்கள் என்ற ஒரு கருத்தை கூறி இருக்கின்றார். அத்தோடு இந்த ஆயுதப் போராட்டத்தை நான் மிகவும் கொச்சைப்படுத்தி இருப்பதாகவும் ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டு இருக்கிறார்.
தமிழர்களின் அறவழிப் போராட்டம் ஆயுதவழி போராட்டம் மனித உரிமை சார்ந்த போராட்டத்தினை விடுதலை சார்ந்த போராட்டத்தினை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நான் கொச்சைப்படுத்தியதும் இல்லை விமர்சித்ததும் இல்லை. ஆகவே வெறுமனே பொய்களை கூறி இந்த தேர்தலில் அவர் தவறான பாதையில் மக்களை வழிநடத்த பார்க்கின்றார்.
ஒருமுறை என்னை சந்தித்தபோல பிரசாந்த் கூறியிருந்தார். கடந்த தேர்தலில் நீங்கள் தோற்கவில்லை தோற்கடிக்கப்பட்டீர்கள் என்று கூறியிருந்தார். பண பரிவர்த்தனை ஊடாக தோல்வி நிகழ்த்தப்பட்டிருக்கின்றது என்று கருத்தினை கூறியிருந்தார் அவற்றை அவர் பொய் என்று கூற மாட்டார் என நான் நினைக்கின்றேன்.
ஆணையிறவு தொடர்பாகவும் ஒரு கருத்தை பிரசாந்த் கூறியிருக்கின்றார் அதாவது ஸ்ரீ நேசன் ஐயா ஆணையிறவை கண்டிருக்க மாட்டார் என்று கூறி இருக்கின்றார்.
அவ்வாறு என்றால் பிரசாந்தன் ஆயுதங்கள் தரித்துக்கொண்டு ஆணையிறவுக்கு எதிராக போர் செய்தவரா? அல்லது ஆணையிறவு சம்பந்தமாக இடம்பெற்ற போராட்டத்தில் எந்த பக்கம் அவர் இருந்தார். அதாவது போராளிகளின் பக்கமாக இருந்தவரா? அல்லது காட்டிக் கொடுக்கும் பக்கம் இருந்தாரா? என்ற கேள்வியை நான் கேட்கின்றேன்.
நான் கல்வி கற்கின்ற காலம் தொடக்கம் தமிழ் தேசியம் சார்ந்து செயல்படுகின்றேன் தற்போது வரை.
தேவையற்ற விதண்டாவாதங்களை கதைத்து என்னுடைய தேவையான நேரத்தை வீணடிக்க வேண்டாம். இப்போது சட்டம் கண்களை திறந்து இருக்கின்றது. கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் பக்கத்துணையாக இருந்து குற்றவாளிகள் தப்பித்து கொண்ட காலம் இப்போது மலையேறி விட்டது. ஊழல் லஞ்சம் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் படு கொலை செய்தவர்கள் காணாமல் ஆகியவர்களை கைது செய்கின்ற ஒரு காலம் வந்திருக்கின்றது என்பதனை மறந்து விட வேண்டாம்.
எங்களுடைய கட்சியின் தலைவர் யோசப்பரராஜ சிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டது, அதேபோன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சந்திரநேரு சுட்டுக் கொல்லப்பட்டார், புத்தி ஜீவியாக இருந்த பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தி கொலை செய்யப்பட்டிருந்தார், அதே போன்று சிறந்த ஊடகவியலாளர் சிவராம் கொலை செய்யப்பட்டிருந்தார், அதேபோன்று நடேசன், சுகிர்தன் கொலை செய்யப்பட்டிருந்தார்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிய தொண்டர்கள் பிரேமினி தனுஷ்கோடி, சதீஸ்கரன் போன்ற பலர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள், சிறு குழந்தைகள் வர்ஷிகா மற்றும் ஒரு சிறு யூனியன் பாடசாலையில் கல்வி கற்ற சதீஷ் என்பவரின் மகளார் கடத்தி கொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
இவ்வாறான பல்வேறுபட்ட நிகழ்வுகள் கடந்த காலத்தில் ஒரு வைராக்கியமான ஆட்சியில் நடைபெற்றது. இவ்வாறெல்லாம் நடைபெற்ற போது அந்த அரசாங்கத்திற்கு பக்க துணையாக இருந்தவர்கள் யார் என்பதனை மக்கள் மறக்கவில்லை.
முன்னாள் போராளிகளாக இருந்தவர்களை கூட வீட்டில் வந்து இருக்க விடவில்லை அவர்களையும் கடத்தி கொலை செய்திருந்தார்கள்.
அப்பட்டமான பொய்களை சொல்லி கடந்த கால வக்கிரமான செயல்களை கொலை கலாச்சாரத்தை மறைக்க முற்பட வேண்டாம் ஆகவே நீங்கள் எதை சொல்கின்றீர்களோ நீங்கள் பொய்யை கூறினால் நான் உண்மையை கூறுவேன்.