கொழும்பு – கோட்டையில் உள்ள கிரிஷ் கட்டிடம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணைகளில் இருந்து விலகுவதாக கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுல திலகரத்ன இன்று வியாழக்கிழமை (27) தெரிவித்துள்ளார்.
கிரிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ.70 மில்லியன் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
சர்ச்சைக்குரிய கிரிஷ் ஒப்பந்த வழக்கு தொடர்பாக இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பெப்ரவரி மாதம் பிணை வழங்கியிருந்தது.
சனத் பாலசூரிய மற்றும் போத்தல ஜயந்த ஆகியோரின் முகநூல் பக்கத்தில் தன்னை பற்றி பதிவிட்டிருந்த கருத்துக்களை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுல திலகரத்ன திறந்த நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு பொருத்தமான நீதிபதியை நியமிக்க, வழக்கு கொழும்பு தலைமை உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகேவிடம் பரிந்துரைக்கப்படும் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.