பதுரலிய – கலவான வீதியில் கொடிப்பிலிகந்த பகுதியில் நேற்று (26) நள்ளிரவு 12 மணியளவில் கலவானயிலிருந்து பதுரலிய நோக்கி பயணித்த இறப்பர் ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர் கலவானை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் புலத்சிங்கல பிரதேசத்தில் உள்ள மரப்பலகை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் ஊழியர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் புலத்சிங்கல மற்றும் ரம்புக்கன பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
செங்குத்தான இந்த பகுதியில் பாரவூர்தி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் சறுக்கியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கலவானை பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கலவானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.