தென் கொரியாவின் தென்கிழக்கு பகுதிகளில் பல இடங்களில் பரவிவரும் காட்டுத்தீயினால் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென் கொரியாவின் தென்கிழக்கு பகுதிகளில் செவ்வாய் அன்று பயங்கர காட்டுத் தீ பரவியது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதோடு, நூற்றுக்கணக்கான கைதிகள் சிறைச்சாலைகளிலிருந்து இடம் மாற்றப்பட்டடுள்ளனர்.
உய்சோங் கவுண்டியில் ஆரம்பித்த காட்டுத்தீயில் புதன்கிழமை காலை 5 மணி நிலவரப்படி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை சான்சியோங் கவுண்டியில் ஏற்பட்ட மற்றொரு காட்டு தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என தென் கொரிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
காட்டுத் தீயில் 68 சதவீதம் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, உய்சோங் காட்டுத் தீ பலத்த காற்றினால் அதிகரித்து “கற்பனை செய்ய முடியாத” அளவுக்கு வேகமாக பரவி வருகிறது என தேசிய வன அறிவியல் நிறுவனத்தின் வன அனர்த்த முகாமைத்துவ நிபுணர் லீ பியுங்-டூ தெரிவித்துள்ளார்.
காற்று மற்றும் வரட்சியான வானிலையால் காட்டுத் தீ வேகமாக பரவிவருவதால் தீயை அணைக்க தீயணைப்பு ஹெலிகொப்டர்கள் மற்றும் தரைப்படை வீரர்களை அனுப்புவதாக தற்காலிக ஜனாதிபதி ஹான் டக்-சூ உறுதியளித்துள்ளார்.
காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதியில் வரட்சியான வானிலை புதன்கிழமை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதம் லொஸ் ஏஞ்சல்ஸின் ஒரு பகுதியை நாசமாக்கிய காட்டுத்தீ மற்றும் வடகிழக்கு ஜப்பானில் சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ ஆகியவை ஒப்பீட்டளவில் அரிதானவை என்பதால், காலநிலை மாற்றம் காட்டுத்தீயை அடிக்கடி ஏற்படுத்தும் என்று லீ தெரிவித்துள்ளார்.
“‘பெரிய அளவிலான காட்டுத்தீ அதிகரிக்கும் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எனவே காட்டுத் தீயை அணைக்க அதிக வளங்களையும் மனிதவளத்தையும் தயார்படுத்தப் போகிறோம்,’ என லீ தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை உய்சோங்கில் ஏற்பட்ட தீ இன்னும் கட்டுப்படுத்தப்படாத நிலையில், பழங்கால கோயில்கள் மற்றும் வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளது.
15,000 ஹெக்டயர் நிலம் தீயினால் எரிந்து சேதமடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை விசேட அனர்த்த வலயமாக தென்கொரிய அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.