இரு நாட்டு மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக இந்திய – இலங்கை மீனவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை வவுனியாவில் ஆரம்பமாகியுள்ளது.
வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள அருந்ததி தனியார் விருந்தினர் விடுதியில் குறித்த பேச்சுவார்த்தை இன்று (26.03) இடம்பெற்று வருகின்றது.
இரு நாட்டு மீனவர் பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு எட்டப்படுவது தொடர்பாக முதல் கட்டமாக இலங்கை – இந்திய மீனவர்களிடையே மீனவர்களின் சொந்த முயற்சியில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து கடந்த வாரம் முடிவு செய்யப்பட்டது. இதன்படி குறித்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.
இதன்போது, இந்திய மீனவ பிரதிநிதிகளை இலங்கை மீனவ பிரதிநிதிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்றதுடன், இந்திய மீனவர்களும் இலங்கை மீனவர்களுக்கு நினைவு பரிசில்களை வழங்கி பேச்சுவார்தையை ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது எல்லை தாண்டி மீன் பிடித்தல், தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்துதல், இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுகின்றமை, இரு நாட்டு மீனவ உறவு தொடர்பில் பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சந்திப்பில், இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஜேசுராஜா, ஆல்வின், சகாயம், ஜஸ்டின், ஜெர்மனியஸ் ஆகியோர் கொண்ட 5 பேர் கொண்ட குழுவினரும், இலங்கை மீனவர்கள் சார்பில் சுப்பிரமணியம் (யாழ்ப்பாணம்), மரியராசா (முல்லைத்தீவு), ஆலம் (மன்னார்), பிரான்சிஸ் (கிளிநொச்சி), அந்தோணிபிள்ளை (கிளிநொச்சி), சங்கர் (மன்னார்) ராமச்சந்திரன் (யாழ்ப்பாணம்), அன்னராசா (யாழ்ப்பாணம்), வர்ண குலசிங்கம் (யாழ்பாணம்) உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழு இந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர்.
இதேவேளை, தமிழக மீனவர்கள் முதல்கட்டமாக ஒரு மாத காலம் இலங்கை கடற்பரப்புக்குள் இழுவை மடி மீன்பிடியை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த முதல் கட்ட மீனவர்களுக்கு இடையேயான மீனவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு நடைபெறுகிறமை குறிப்பிடத்தக்கது.





