மன்னார்- பள்ளமடு பெரியமடு பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை (22) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
பெரியமடு பிரதான வீதியூடாக பயணித்த டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகிய நிலையில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த டிப்பர் வாகனத்தில் 4 நபர்கள் பயணித்துள்ளனர்.
இதன் போது ஈச்சளவக்கை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, சாரதி உள்ளடங்களாக மூவர் காயமடைந்தனர்.
காயமடைந்த மூவரும் உடனடியாக மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






