முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளிலும் தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி வேட்புமனுப் பத்திரங்களைக் கையளித்திருந்த நிலையில், குறித்த நான்கு உள்ளூராட்சி சபைகளுக்குமான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இந் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளையும் இலங்கைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருமான துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய நான்கு உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணத்தினைச் செலுத்தி, உரிய முறையில் வேட்புமனுக்களைக் கையளிதோம்.
இந் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் திணைக்களம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நான்கு உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக மிகவும் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது.
அந்தவகையில் நான்கு உள்ளூராட்சி சபைகளையும் இலங்கைத் தமிழரசுக்கட்சி கைப்பற்றும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன் – என்றார்.