ஹொரணை மிதெல்லமுலஹேன பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கல்பாத்த பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
ஹொரணை நோக்கிப் பயணித்த பாரவூர்தி ஒன்று உந்துருளியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது, உந்துருளியின் செலுத்துனரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரும் படுகாயமடைந்துள்ள நிலையில் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உந்துருளியின் செலுத்துனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து பாரவூர்தியின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.