எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகையும், உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று (28) காலை தொடங்கிய உண்ணாவிரத போராட்டத்தை மாலையுடன் முடித்துக் கொண்ட மீனவர்கள் நேற்று (28) இரவிலிருந்து காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
அரசு அதிகாரிகள் போராட்டத்தை கைவிடுமாறு மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் மீனவர்கள் அதை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டும் மற்றும் நீதிமன்ற காவலிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை சிறையில் தடுத்தும் வைக்கப்பட்டுள்ளனர். அதே போல் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் இலங்கை வசம் உள்ளது.
இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடத்தில் ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள், நாட்டுப்படகு மீனவர்கள் சிறையுள்ள மீனவர்களின் குடும்பத்தினர் முக்கிய கட்சி பிரமுகர்கள், மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் காலை முதல் இரவு வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாலை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்ட மீனவர்கள் அதே உண்ணாவிரத பந்தலில் நேற்று (28) இரவில் இருந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அமைச்சர் அல்லது மத்திய அரசு அதிகாரிகள் மீனவர் பிரச்சனையில் நிரந்தர தீர்வு பெற்றுத் தருவதாக உறுதி அளிக்கும் வரை இந்த காத்திருப்பு போராட்டம் இரவு பகலாக தொடரும் என மீனவர்கள் தரப்பில் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த போராட்டத்தை கைவிடுமாறு ராமேஸ்வரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தமூர்த்தி, ராமேஸ்வரம் வட்டாட்சியர் ஜாபர் உள்ளிட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரை சந்திக்க வருமாறு அழைத்தனர்.
ஆனால் மீனவர்கள் அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் தங்கச்சிமடத்தில் விட்டுவிட்டு அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.
இருப்பினும் அந்த மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருப்பு பந்தலில் தொடர்ந்து மீனவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த காத்திருப்பு போராட்டத்தை அடுத்து தங்கச்சி மடம் முழுவதும் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இன்று (1) மீனவர்கள் இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அதிமுக, எஸ்டிபியை, மனிதநேய மக்கள் கட்சி, மே 17 இயக்கம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆதரவு தர இருப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.





