ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மயிலவட்டவான் மக்கள் போக்குவரத்துக்கு பெரும் சிரமங்களை எதிர்கொள்வதனால் பாடசாலையில் இடைவிலகலும் அதிகரித்துள்ளதாக ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலவட்டவான் பகுதியில் உள்ள மிகவும் வறிய நிலையில் உள்ள மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதற்காக துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தில் மயிலவட்டவான் மிகவும் பின்தங்கிய பகுதியாக காணப்படுவதுடன் பொதுப் போக்குவரத்தினைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமத்தினையும் எதிர்கொண்டுவரும் பகுதியாகும்.
குறித்த பகுதியில் உள்ள மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதில் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டுவருவதனால் பாடசாலை இடைவிலகல்களும் அதிகரித்துவரும் நிலையில் இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மயிலவட்டவான் பாடசாலையின் அதிபர் திவ்யதேவ் அவர்கள் பல்வேறு தரப்பினரிடமும் இது தொடர்பில் வேண்டுகோள் விடுத்த நிலையில் இமயம் அமைப்பின் ஊடாக இதற்கான உதவிகள் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலண்டனில் உள்ள இமயம் அமைப்பின் ஏற்பாட்டின் நிதியுதவியுடன் துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு இன்று செங்கலடி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
செங்கலடி பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், இலண்டனில் இருந்து வருகைதந்துள்ள இமயம் அமைப்பின் பொருளாளர் திருமதி. கமலினி பிரசாத், மட்டக்களப்பு மாவட்ட தகவல் திணைக்கள அதிகாரி வ.ஜீவானந்தம், பிரதேச சிறுவர் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஹஸைட், இமயம் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.சசிகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மிகவும் வறிய நிலையில் உள்ள 12 மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.







