இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைகளத்திற்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்த மீனவர்கள் பேரணியாக சென்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தை அடைந்தனர்.
இருப்பினும் துணைத் தூதரகத்தின் வீதியில் வீதித்தடை போடப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் மீனவ அமைப்புகளைச் சேர்ந்த ஐந்து பிரதிநிதிகள் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்திய துணைத் தூதரகத்தில் மகஜரை கையளித்த மீனவர்கள் தொடர்ச்சியாக பேரணியாக வந்து யாழ். மாவட்ட செயலத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் 5 மீனவ பிரதிநிதிகள் அழைத்துச் செல்லப்பட்டு யாழ். மாவட்ட செயலக அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதன்போது மீனவர்கள் யாழ். மாவட்ட செயலக அதிகாரிகளிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர்.
பின்னர் பேரணியானது வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தை சென்றடைந்தது. அதன் பின்னர் ஆளுநர் செயலக அதிகாரிகளிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.
பின்னர் மீனவர்கள் அங்கிருந்து நீரியல் மற்றும் கடற்றொழில் அமைச்சரின் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுடன் கலந்துரையாடல் மேற்கொண்டவேளை கருத்து முரண்பாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மீனவர்கள் அவர்களிடமும் மகஜர் கையளித்ததுடன் போராட்டம் நிறைவுக்கு வந்தது.
யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான கடற்றொழில் சங்கங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் இதில் பங்குபற்றினர்.






