கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றும் அதிபர் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி கிளிநொச்சி மாவட்ட பதில் அரச அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அதிபர் சங்கம் சார்பில் மகஜர் ஒன்று நேற்று(24-02-2025) மாலை கையளிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைய நாட்களாக அதிகரித்து வரும் வழிப்பறி கொள்ளைகள் மற்றும் அதிபர், ஆசிரியர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்தும் தங்களது பாதுகாப்புகளை உறுதிப்படுத்துமாறு கோரியே குறித்த மகஜர் கையளிக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்க பிரதிநிதிகள் நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட பதில் அரச அதிபர் அவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன், தங்களது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர்.
அதாவது அண்மைய நாட்களில் தொடர்ச்சியாக அதிபர் ஆசிரியர்கள் தினமும் காலை வேளையில் பாடசாலைகளுக்கு சென்று மீள திரும்புகின்ற போது அவர்களுக்கு உரிய பாதுகாப்பு இன்றி அவர்கள் தங்களுடைய மோட்டார் சைக்கிள் மற்றும் சொத்துக்கள் வழிபறிக் கொள்ளையர்களால் கொள்ளையிடப்படுகின்ற சம்பவங்கள் மற்றும் தாக்குதல்கள் அதிகளவில் இடம் பெற்று வருவதாக கவலை வெளியிட்டனர்.
இவற்றை கண்டித்து உரிய பாதுகாப்பை பெற்று தருமாறு கோரி மாவட்டபதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களை கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் சங்க பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியதுடன் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மாவட்ட பதில் அரசாங்க அதிபர் குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொலிசார் மற்றும் பாதுகாப்பு தரப்புடன் கலந்தாலோசித்துள்ளதாகவும், விரைவில் துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகளுடன் அதிபர் ஆசிரியர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.


