உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கிய மகா கும்பமேளா, வரும் 26-ந்தேதி நிறைவடைய உள்ளது.
இந்த மகா கும்பமேளாவில் இதுவரை 62 கோடிக்கும் மேற்பட்டோர் வருகை தந்து, திருவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளார். உலகின் மிகப்பெரிய இந்த கலாசார, ஆன்மிக நிகழ்வில் பல நடிகை நடிகர்களும் புனித நீராடி வருகின்றனர். அந்தவகையில், நடிகர் அக்சய் குமார் இன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். நீராடிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இங்கு இவ்வளவு நல்ல ஏற்பாடுகளை செய்ததற்காக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி கூறுகிறேன் என்றார்.
மகா கும்பமேளா நிறைவு பெற இன்னும் ஓரிரு தினங்களே உள்ள நிலையில், திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.