கண்டி, பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிபத்கும்புர பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிலிருந்து பெறுமதியான பொருட்களை திருடியதாகக் கூறப்படும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேராதனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர் கிரிபத்கும்புர பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்குச் சென்றுள்ளார். இதன்போது, பல்பொருள் அங்காடியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவை சோதனையிட்டுக்கொண்டிருந்த ஊழியர்கள் சிலர், உப பொலிஸ் பரிசோதகர் தேயிலை பொதி மற்றும் அழகுசாதன பொருட்களை தனது ஆடைக்குள் மறைத்து வைப்பதைக் கண்டுள்ளனர்.
பின்னர், சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர் திருடிய பொருட்களுடன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.