வவுனியா பூந்தோட்டம் வீதியில் இன்று காலை (24.02.2025) உந்துருளியுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் கார் மற்றும் உந்துருளி முற்றாக தீப்பற்றி எரிந்ததுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா நகர் பகுதியில் இருந்து பூந்தோட்டம் நோக்கிச் சென்ற காரும், பூந்தோட்டம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி வந்த உந்துருளியும் நேருக்கு நேர் மோதிய நிலையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்த நிலையில் அங்கு குழுமிய மக்களினால் தீயை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் அது சாத்தியப்படவில்லை.
இந்நிலையில் உந்துருளியில் வந்த இருவர் காயம் அடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு காரில் வந்தவர்கள் காப்பாற்றப்பட்டனர்.
வவுனியா நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்த முயற்சித்த போதிலும் கார் மற்றும் உந்துருளி முழுமையாக எரிந்துள்ளது.
மேலும் இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


