தூய்மையான இலங்கை செயற்பாட்டின் முன்மாதிரி திட்டத்தின் தேசியக் கருத்தின் கீழ், காலநிலை மாற்றம் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு கற்பிப்பதில், குமுழமுனை மகா வித்தியாலயம் முக்கியமான முன்னேற்பாட்டை எடுத்துள்ளது. பாடசாலையின் அதிபரின் வேண்டுகோளின்படி, முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு நேற்றையதினம் (21.02.2025) மாணவர்களின் மனதில் சுற்றுச்சூழல் மாற்றங்களைப் பற்றிய அறிவையும் பொறுப்புணர்வையும் விதைப்பதற்காக விழிப்புணர்வு அமர்வொன்றை ஏற்பாடு செய்தது.
குமுழமுனை மகா வித்தியாலயம், தூய்மையான இலங்கை வேலைத்திட்டம் அறிமுகமாகும் முன்னரே, சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஊக்குவித்து வந்த ஒரு பாடசாலையாகும்.
சுற்றுச்சூழல் நலனுக்காக பாடசாலையின் தொடர்ச்சியான முயற்சிகள், இப்பாடசாலையை ஒரு முன்மாதிரி கல்வி நிறுவனமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மாற்றியுள்ளது. மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த ஒழுக்கத்துடன் மற்றும் உற்சாகத்துடன் அமர்வில் கலந்துகொண்டு, காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் தீர்வுகள் குறித்து விவாதங்களில் தீவிரமாக ஈடுபட்டனர்.
விழிப்புணர்வு மற்றும் அறிவு பரிமாற்றம் நிகழ்ச்சியின் போது, முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவின் உதவிப்பணிப்பாளர் சி.கோகுலராஜா கலந்து கொண்டு, காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் மாற்றங்கள், குறைப்பு நடவடிக்கைகள், மற்றும் மாணவர்களின் பொறுப்பான பங்குபற்றல் குறித்து மதிப்புமிக்க தகவல்களை பகிர்ந்துகொண்டார். மேலும், காலநிலை மாற்ற விழிப்புணர்வுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு துண்டுப் பிரசுரங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
மேலும், சுனாமி, வெள்ளம், சூறாவளி, இடிமின்னல், நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் பற்றிய புத்தகங்கள் பாடசாலை நூலகத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவின் உதவிப்பணிப்பாளரால் வழங்கப்பட்டன.
முதலுதவி குறித்த புத்தகமும் வழங்கப்பட்டது. இப்புத்தகங்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவசர சூழ்நிலைகளில் உடனடி நடவடிக்கைகளை எடுக்கும் திறனை பெறும் வகையில் உதவியாக அமைந்தது.
குமுழமுனை மகா வித்தியாலயத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ஒரு குழு செயற்பட்டு வருவதுடன், அவர்கள் தற்போதை காலநிலை மாற்றத்திற்கேற்ப பொறுப்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர்.
இவ்விழிப்புணர்வின் பின் முதன்மையான செயற்திட்டமாக, மாணவர்களின் வீடுகளில் இருந்து மின்சார கட்டண விவரங்களை சேகரித்து, அதன் அடிப்படையில் மின் உபயோகத்தை குறைக்கும் முயற்சியில் மாணவர்களை சுற்றுச்சூழல் குழு ஈடுபடுத்தவுள்ளது.
மேலும், பாடசாலையில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட கழிவு முகாமைத்துவ திட்டத்தையும், சுற்றுச்சூழல் குழு மேம்படுத்த உள்ளதோடு, மாணவர்கள் பொறுப்புணர்வுடன் கழிவுகளை நிர்வகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சாரணர் குழுவின் சமூக சேவை குமுழமுனை மகா வித்தியாலயத்தின் சாரணர் குழு, சமூக பொறுப்புணர்வை முன்னிறுத்தும் வகையில், முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒரு சிரமதானப் பணியை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.
இத்திட்டம், தூய்மையான இலங்கை திட்டத்தின் நோக்குகளுக்கு துணைபுரிவதுடன், மாணவர்களுக்கு சமூக சேவை, ஒழுக்கம், குழுப் பணியாற்றும் திறன், மற்றும் தலைமைத்துவ பண்புகளை வளர்க்கும் முக்கிய வாய்ப்பாக அமைகிறது.
பாடசாலைகளுக்கான முன்மாதிரி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் நிலையான நடைமுறைகளை ஊக்குவிப்பதில் குமுழமுனை மகா வித்தியாலயத்தின் முயற்சிகள் பாராட்டுதலுக்குரியவை.
மாவட்டம் சார்பாக, பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் உழைப்புக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏனைய பாடசாலைகளும் குமுழமுனை மகா வித்தியாலயத்தின் முன்மாதிரியை பின்பற்றி, இதேபோன்ற சுற்றுச்சூழல் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும். இதனால் மாணவர்களிடையே தலைமைத்துவம், ஒழுக்கம், மற்றும் பொறுப்புணர்வை வளர்ப்பதன் மூலம், சுற்றுச்சூழலுக்கு அக்கறை கொண்ட ஒரு புதிய தலைமுறையை உருவாக்க முடியும்.
தூய்மையான இலங்கை திட்டத்தில் பாடசாலைகள் எப்படி ஒரு முக்கிய பங்கு வகிக்க முடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக, குமுழமுனை மகா வித்தியாலயத்தின் இந்த முயற்சி விளங்குகின்றது.



