ஆசியாவில் அழகிய இலங்கையினை மாற்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் உன்னத திட்டமான கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இலங்கை சாரணியர் சங்கமும் இணையும் தேசிய நிகழ்வு இன்று நாடெங்கிலும் நடைபெற்றது.
இதன் கீழ் நாடளாவிய ரீதியில் உள்ள புகையிரத நிலையங்களை தூய்மைப்படுத்தும் அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தினை இன்று இலங்கை சாரணிய இயக்கம் ஆரம்பித்து வைத்தது.
இந்த வேலைத்திட்டத்தில் மட்டக்களப்பு, கல்முனை, அக்கரைப்பற்று சாரணிய இயக்கமும் இணைந்த வேலைத்திட்டம் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கை சாரணிய சங்கத்தின் சிரேஸ்ட பிரதி ஆணையாளரும் மட்டக்களப்பு மாவட்ட பதில் ஆணையாளருமான அமிதன் கார்மேகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்ஸினி ஸ்ரீகாந்த் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இலங்கை சாரணிய சங்கத்தின் தலைமையக ஆணையாளரும் கிழக்கு மாகாண சாரணியர் சங்க இணைப்பாளருமான பி.சசிகுமார், அக்கரைப்பற்று கல்முனை சாரணிய சங்கத்தின் ஆணையாளர் எம்.ஐ.உதுமாலெப்பை, மட்டக்களப்பு புகையிரத நிலைய அதிபர் ஏ.பேரின்பராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது இலங்கை சாரணிய சங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா உறுதியுரை பிரதம அதிதி மற்றும் சாரணிய ஆணையாளரினால் வாசிக்கப்பட்டு அதிதிகள் உரையுடன் தூய்மைப்படுத்தும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் புகையிரத வளாகத்தில் மரங்களும் நடப்பட்டது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டம், கல்முனை, அக்கரைப்பற்று ஆகிய பகுதிகளிலிலிருந்து தமிழ்-முஸ்லிம் மாணவர்கள் பெருமளவானவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.











