வீதி புனரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் நேற்றையதினம் (20.02.2025) பி.ப. 02.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், அரசாங்கமானது வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வடமாகாணத்தின் வீதிகளைப் புனரமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அதற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்தின் வீதிகளையும் புனரமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், மாவட்டத்தில் புனரமைக்க வேண்டிய வீதிகளின் விபரங்களை துல்லியமான முறையில் தயாரித்து உரிய அமைச்சிற்கு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டதுடன், அதற்காக பிரதேச செயலக ரீதியாக புனரமைக்க வேண்டிய வீதிகளின் விபரங்களை வீதிகளுக்குரிய வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுடன் இணைந்து சரியான முறையில் மாவட்டத்தின் மொத்த தேவைப்பாடுகளையும் தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக புனரமைப்பு செய்ய வேண்டிய வீதிகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதி, உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.


