எதிரணிகளை நாடாளுமன்றத்துக்குள் முடக்கிவைத்துவிட்டு உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படக்கூடாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. வலியுறுத்தினார்.
எனவே, பாதீட்டு கூட்டத் தொடர், ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை, தமிழ், சிங்களப் புத்தாண்டு என்பன முடிந்த பின்னர் பொருத்தமானதொரு நாளில் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-
“மார்ச் 21 ஆம் திகதி வரை வரவு- செலவுத் திட்ட கூட்டத் தொடர் நடைபெறும். பாதீட்டு விவாதம் என்பது எதிரணிகளுக்கு முக்கியம். எனவே, எம்மை நாடாளுமன்றத்துக்குள் வைத்துவிட்டு தேர்தல் நடத்தப்படக்கூடாது.
பொருத்தமானதொரு சூழ்நிலையிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும். மாதக் கணக்கில் தேர்தலைப் பிற்போடுமாறு கோரவில்லை.
ஜி.சீ.ஈ . சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது. தமிழ், சிங்களப் புத்தாண்டு நடைபெறவுள்ளது. சுமார் 10 நாட்கள் வரை விடுமுறை காலப் பகுதி உள்ளது. எனவே, அரச சேவையாளர்களுக்கு நெருக்கடி நிலை உருவாகும்.
எனவே, தேர்தல் திகதி தொடர்பில் சுயாதீனமாகத் தீர்மானம் எடுக்குமாறு நாம் தேர்தல் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொள்கின்றோம். ஏற்கனவே செலுத்திய கட்டுப்பணமும் மீளச் செலுத்தப்படவில்லை. எமக்கு நிதி நெருக்கடி உள்ளது. எனவே, அதனை மீளச் செலுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – என்றார்.