“2025ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.”
- இவ்வாறு சமூக உட்கட்டமைப்பு வசதிகள் துறையின் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை தந்திருந்த பிரதி அமைச்சர், ஊடகவியலாளர் சந்திப்பிலும் ஈடுபட்டார். இதன்போது, ‘வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறப்புத் திட்டமிடல்களைக் கொண்டுள்ளதா?’ என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான இலக்குகளில் வடக்கு – கிழக்குப் பகுதிகளை அபிவிருத்தி செய்வதும் ஒன்றாகும். இன்னும் சில காலத்தில் முன்வைக்கப்படவுள்ள வரவு – செலவுத் திட்டத்தில் இது தொடர்பான அறிவிப்புக்களை நீங்கள் எதிர்பார்க்கலாம்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
வடக்கிலும் கிழக்கிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களும் அதிகளவில் உள்ளனர். அவர்களின் வாழ்க்கையை அழகாகவும், வளமாகவும் மாற்றுவதை நாங்கள் எங்களின் நோக்கமாகவே கொண்டுள்ளோம்.” – என்றார்.