யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுவதற்கு ஏனைய கட்சிகளும் ஆதரவளிக்க முன்வந்திருப்பது நல்ல விடயம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை மாலை தையிட்டி விகாரைக்கு முன்பாக காணி உரிமையாளர்களின் ஏற்பாட்டில் போராட்டம் ஆரம்பமாகவுள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சட்டவிரோதமாக விகாரையைக் கட்ட ஆரம்பிப்பதற்கு அடிக்கல் நாட்டிய உடனேயே இது சம்பந்தமாக நாங்கள் கேள்விப்பட்டு அந்த வேலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
அந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இராணுவத் தளபதியும் கலந்துகொண்டிருந்தார். இராணுவமே இந்தச் சட்டவிரோத செயற்பாட்டைச் செய்தது.
ஆகவே, அந்தக் கட்டடம் கட்டி இருக்கக்கூடாது. எந்த அனுமதியும் எடுக்காமல் குறித்த விகாரை சட்டவிரோதமாகத் தனியார் காணியில் கட்டப்பட்டுள்ளது.
ஆகவே, குறித்த சட்டவிரோதக் கட்டடம் உடனடியாக அகற்றப்பட வேண்டும். அதற்காக நாங்கள் தொடர்ந்து போராடி வருகின்றோம். இந்நிலையில், ஏனைய கட்சிகளும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளமை சிறந்த விடயம்.” – என்றார்.