தடை செய்யப்பட்ட ரோளர் படகு மூலம் தடை செய்யப்பட்ட இழுவைமடித் தொழிலில் ஈடுபட்ட மன்னார் படகுகள் இரண்டு கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளால் இன்று அதிகாலை மடக்கிப் பிடிக்கப்பட்டன.
கிளிநொச்சி எல்லைப் பரப்புக்குள் இந்திய இழுவைப் படகுகளுக்கு நிகராக மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட ரோளர் படகுகளும் இழுவைமடித் தொழிலில் ஈடுபடுவதனால் தமது தொழில் பாதிக்கப்படுவதற்குத் திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மீனவ சங்கங்கள் விடுத்த கோரிக்கையின் பேரில் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது இழுவைமடித் தொழிலில் ஈடுபட்ட மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு ரோளர் படகுகளை மடக்கிப் பிடித்தனர்.
இவ்வாறு பிடிக்கப்பட்ட இரண்டு ட்ரோளர் படகுகளிலும் 7 மீனவர்கள் தொழிலில் ஈடுபட்டிருந்தமையால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர் என மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.
