தேசிய ரீதியில் சாதித்து மாகாண மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் முதலிடத்தினை பெற்றுள்ள வவுனியா திருநாவற்குளத்தைச் சேர்ந்த சாதனைப் பெண்மணி லூசியா யுவச் சந்திரகுமார்.
இந்த உலகத்தில் பல விதமான பரிணாமங்களை ஒரு பெண் அடைகிறாள். ஒரு தாயாய், மகளாக, மனைவியாக, இல்லத்தரசியாக, சகோதரியாக, தோழியாக காலத்துக்கு காலம் ஒரு பெண் ஏற்கும் வேடங்கள் எத்தனை. உடல் உறுதி கொண்டு இருக்கும் ஆண்களை விட மனவுறுதி அதிகம் உள்ள பெண்கள் எப்போதும் சிறப்பானவர்கள் தான். சவால்களை தகர்த்து, சாதனைகள் பல படைக்க உறுதியான மனமும், உயர்வான எண்ணம் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் பூ மகள்கள் ஆயிரமாயிரம் பேர் இருக்கிறார்கள். அவர்களுள் ஒரு சாதனை பெண்ணின் வீரத்தை கட்டுரை வடிவில்..
இன்றைய உலகின் யதார்த்தமாகவும் இதுவே காணப்படுகின்றது. நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையுமாய் எங்கள் பெண்கள் வீட்டிலிருந்து பொதுவெளிக்கு வந்து புதுமைகள் படைப்பதற்கான சந்தர்ப்பங்களும், வாய்ப்புக்களும், அங்கீகாரங்களும் இன்றைய உலகில் மிகக் காத்திரமாகவே கிடைத்துக் கொண்டிருக்கின்றன.
இன்றைய கல்விச் சூழலில் பெண்களின் கால்த்தடம் மிகத் திடமாகவே இருக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரை ஆண், பெண் பேதமின்றி அனைத்துச் சிறுவர்களுக்குமான தரமான கல்வியும், சமமான தொழில் வாய்ப்புக்களும் கிடைத்துக் கொண்டு தான் இருக்கின்றன. அதேபோன்று அனைத்துத் தொழில் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு மிகவும் காத்திரமானதாக இருந்து கொண்டிருக்கின்றது.
இதேபோன்று தனித்துவமான பெண்கள் சமுதாயத்துக்கு எடுத்தக்காட்டாக விளங்கும் லூசிகா.
தேசிய அருங்கலைகள் பேரவையினால் 2024ம் ஆண்டு நடாத்தப்பட்ட சில்ப் அபிமானி ஜனாதிபதி விருதிற்கான கண்காட்சிப் போட்டியில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அவர் மாகாண மட்ட ரீதியிலும், தேசிய ரீதியிலும் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.
இவர் வவுனியா திருநாவக்குளம் பகுதியில் வசிக்கும் பெண், சுயதொழில் மூலமாக பனை ஓலை பொருட்களை உற்பத்தி செய்து அசத்தி வருகின்றார்.
பனை சார் உற்பத்தித்துறையில் ஆர்வம்காட்டி அதில் ஈடுபட்டு அங்கு பணிபுரிந்து அனைவருக்கும் முன்னுதாரணமாகவும் தனித்துவ அடையாளத்துடனும் திகழ்ந்து கொண்டிருக்கும் லூசியா
தினசரி காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை பனை ஓலைபொருட்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றார். பனை ஓலை குருத்து35 ரூபாய்க்கு வாங்கப்பட்டு அதனை பயனுள்ள பொருட்களாக மாற்றம் செய்துவிற்கின்றார்.
கண்களைக் கவரும் இந்த கலைப்பொருட்களை உருவாக்கும் மூலப் பொருளாக இருப்பவை, பனையின் இளம் ஓலைகள். இதனை குருத்து ஓலை என்று அழைக்கிறார்கள். அந்த ஓலையை இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கிறார்கள். ஓலை நன்றாக காய்ந்ததும், பொருட்கள் செய்யும் பதத்துக்கு வந்து விடுகிறது. முதலில் ஓலைகளில் உள்ள ஈர்க்குகளை சிறிய கத்தி மூலம் பிரித்து எடுக்கிறார்கள். பின்னர் செய்யப்படும் பொருட்களுக்கு ஏற்ப ஓலைகளை சிறிய அளவில் வெட்டுகின்றனர்.
பெரிய அளவிலான கலைப்பொருட்களை தயார்செய்யும்போது பனை ஓலை பெரிய அளவிலும், சிறிய பொருட்கள் தயார் செய்ய பனை ஓலைகளை சிறிய அளவிலும், தேவைக்கு தக்கபடி தனித்தனியாக வெட்டி எடுக்கிறார்கள்.
பனை ஓலைகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் ஓலைகளை அழகான முறையில் வண்ணச் சாயம் பூசி வண்ண பெட்டிகள் செய்து வருகின்றனர். பனை ஓலைகளில் மஞ்சள், நீலம், இளஞ்சிவப்பு போன்ற நிறங்களில் சாயங்கள் பூசப்பட்டு நன்றாக காய்ந்த உடன் அந்த ஓலையில் இருந்து தேவையான பொருட்கள் செய்யப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், தற்போது பிளாஸ்டிக்கில் என்னென்ன பொருட்கள் உருவாக்கி சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறதோ, அதையெல்லாம் தாண்டி அனைத்து பொருட்களையும் பனை ஓலை மூலமாக செய்து காட்சிப்படுத்தி காட்டுகின்றனர்.
ஒருகாலத்தில் பனை ஓலையில் பாய், கூடை, சுளகு, பூக்கள், கருப்பட்டிவைக்கும் கொட்டான்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. தற்போது பல்வேறு வடிவங்களில், பல்வேறு வகைகளில் பனை ஓலை பொருட்கள் செய்து தரப்படுகின்றன. ஒருபொருளின் மாடல் கொடுத்தால் பனை ஓலையில் அதேபோல் செய்துதருகின்றனர். இதில் மிகவும் ஆச்சரியப்படக் கூடிய விஷயமாக இருப்பது பெண்கள் தலையில் சூடக்கூடிய பூக்களைக்கூட பனை ஓலையில் வண்ண வண்ண நிறத்தில் செய்து அசத்துகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் வெயிலுக்கு இதமாக பனை ஓலைத் தொப்பி, பூக்கூடை, பென்சில் பை என வகைவகையான பனைப் பொருள்களை இவர்கள் செய்து வருகின்றனர்.
பென்சில் பாக்கெட், மாலைகள், தோரணங்கள், இடியாப்ப தட்டுகள், புட்டு கொட்டில், இடியாப்ப பெட்டி, அரிசி பெட்டி, தாம்பூல தட்டுகள், சைஸ் வாரியாக கொட்டான்கள், ஸ்வீட் பாக்கெட், பிரியாணி பெட்டி, கீ செயின், விசிறி,சொளகு, கிரீடம், நகைப்பெட்டி போன்றனவும் செய்து வருகின்றனர்.



