“தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு யாழ்ப்பாணம் ஜனாதிபதி மாளிகைக்கானது அல்ல. அது அவர்களது அரசியல் உரிமை மற்றும் இருப்புக்கான அடையாளங்களைப் பாதுகாப்பதாகவே இருக்கின்றது.” – இவ்வாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக இணைப்பாளர் சிறீக்காந் பன்னீர்ச்செல்வம் சுட்டிக்காட்டினார்.
“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதை உணர்ந்தவராக பிரச்சினைக்கான தீர்வு விடயத்தைக் கையாள வேண்டுமே தவிர வெறும் அரசியல் தேவைகளுக்காக தமிழ் மக்களைப் பயன்படுத்த முற்படக்கூடாது.” – என்றும் அவர் வலியுறுத்தினார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்துக் கூறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வடமராட்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போது கடந்த கால அரசுகளை மோசடிக்காரர் என்ற போர்வையில் குற்றம் சாட்டியதுடன், தான் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டுள்ளதாகவும், யாழ்ப்பாணத்திலுள்ள ஜனாதிபதி மாளிகை வேண்டுமா? வேண்டாமா? என்ற கேள்வியை மக்களிடம் கேட்டு மக்களின் உணர்வுகளுக்கேற்ப பொதுத் தேவைக்கு அதைக் கையளிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருந்தார்.
ஆனால், குறித்த விடயம் தமிழ் மக்களின் முதன்மையான அபிலாஷையாகவோ – தேவையாகவோ இருக்கவில்லை.
மாறாக அந்த மேடையில் தையிட்டி விகாரை வேண்டுமா? வேண்டாமா? அல்லது பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பது, காணி நிலங்களை விடுவிப்பது, அரசியல் உரிமை, மாகாண சபைத் தேர்தல் போன்றவற்றுக்குத் தீர்வுகள் வேண்டுமா? வேண்டாமா? உள்ளிட்ட கேள்விகளை மக்களிடம் முன்வைத்து மக்களின் உணர்வுகளைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.
இதுவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். இவற்றுக்குத் தீர்வு கொடுக்க முன்வருவார் என்றே நாமும் எதிர்பார்த்தோம். ஆனால், அது நடக்கவில்லை.
மாறாக தனது ஆட்சியில் உள்ள குறைபாடுகளை மறைக்க யாழ்ப்பாணம் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் வடக்கின் ஒட்டுமொத்த அதிகாரிகளையும் இயலாதவர்கள் என்ற போர்வையில் சித்தரிக்க ஜனாதிபதி முற்பட்டிருந்தார்.
இந்தப் போக்கும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகவே பார்க்க முடிகின்றது.” – என்றார்.