சுவீடனின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள கல்வி நிலையமொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (04) நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர்களில் துப்பாக்கிதாரியும் அடங்குவதாக சுவீடன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஸ்டாக்ஹோமுக்கு மேற்கே 200 கிமீ (125 மைல்) தொலைவில் உள்ள ஓரேப்ரோவில், முறையான கல்வியை முடிக்காத அல்லது உயர்கல்வியில் தொடர்ந்து மதிப்பெண் பெறத் தவறிய இளைஞர்களுக்காக நடத்தப்பட்டு வந்த கல்வி நிலையத்திலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்களில் பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர், குறைந்தது நான்கு பேர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் பாதிக்கப்பட்ட ஏனைய நபர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிப் பிரயோகத்திற்கான காரணம் வெளியாகவில்லை.
இது சுவீடன் வரலாற்றில் நடந்த மிக மோசமான துப்பாக்கிச் சூடு என்று பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்சன் விவரித்துள்ளார்.