“வடக்கு மக்கள் தெற்குத் தலைவர் மீது முதன்முறையாக நம்பிக்கை வைத்துள்ளனர். இது மிக முக்கியமாகும். அந்த மக்களுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. அவற்றை நாம் நிறைவேற்றுவோம். வடக்கில் உள்ள பிரச்சினைகளுக்கு கூடிய விரைவில் தீர்வு காண்போம்.” – இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
குருநாகலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நான் யாழ்ப்பாணம் சென்றிருந்தேன். யாழ். மக்கள் முதன்முறையாக தெற்கு அரசு மீது, தெற்குத் தலைவர்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளதைக் காணமுடிந்தது. இது மிக முக்கியமாகும்.
வடக்கில் உள்ள சில தலைவர்கள் தனிநாடு தருகின்றோம் எனக் கூறியபோதும், அரசியல் பரம்பரையில் வந்தவர்கள் இருக்கின்றபோதிலும் மக்கள் எம்மை தேர்வு செய்தனர். அவர்களுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அவற்றை நாம் நிறைவேற்ற வேண்டும்.
எம்மிடையே மீண்டும் பிரிவினைவாதம், போர், நம்பிக்கையீனம் என்பன இல்லாத, அனைவரும் ஒன்றியைணக்கூடிய நாடொன்றைக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்குரிய ஆசிர்வாதம் வடக்கு மக்களிடமிருந்து கிடைத்துள்ளது.
30 வருடகால போர் மற்றும் அரசியல் காரணங்களால் வடக்கு பகுதிக்கு அபிவிருத்திகள் சென்றடையவில்லை. அந்தப் பகுதி மக்களின் பிரச்சினைகளை வேகமாகத் தீர்க்க வேண்டும். இது எமது பிரதான கடமையாகும். இனவாதம் மற்றும் மதவாதம் தலைதூக்குவதற்கு நாம் இடமளியோம். தேசிய சமத்துவத்தைக் கட்டியெழுப்போம்.” – என்றார்.