தமிழ்த் தேசிய இனத்தின் தலைவர்களை ஒன்றிணைத்த ஒரு போராளியே மாவை சேனாதிராஜா என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு நேற்று அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:-
“மாவை சேனாதிராஜாவின் இழப்பு என்பது இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனத்துக்குமான இழப்பாகும்.
தமிழ்த் தேசிய இனத்தின் தலைவர்களை ஒன்றிணைத்த ஒரு போராளியே மாவை சேனாதிராஜா. தமிழ் மக்களுக்காகத் தனது வாழ்க்கையில் பல தியாகங்களையும், அர்ப்பணிப்புக்களையும் செய்த ஒருவரே அவர்.
கட்சியைக் கட்டி வளர்ப்பதில் எல்லோரையும் அந்நியோன்யமாக அரவணைத்து சென்ற ஒருவரே அவர்..
மாவை சேனாதிராஜாவின் இழப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குப் பேரிழப்பு என்பதுடன் அது கட்சிக்குப் பாரிய தாக்கத்தையும் ஏற்படுத்தும்.
நாம் தமிழரசுக் கட்சி சார்ந்து, எல்லா வேறுபாடுகளையும் மறந்து மாவை சேனாதிராஜாவின் நினைவாக பிளவுகள், பிரிவுகள் இன்றி ஒற்றுமையாக முன் செல்ல வேண்டும்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியை வளர்த்து மீண்டும் பழைய நிலைமைக்குக் கொண்டுவர வேண்டும். அது மாவை சேனாதிராஜாவின் பெயராலேயே நிறைவேற வேண்டும்.
நல்ல ஆத்மா வஞ்சகம் இல்லாத உள்ளத்தைக் கொண்டவரே மாவை சேனாதிராஜா. அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று நான் பிரார்த்திக்கின்றேன்.” – என்றார்.