இந்நாட்டில் உள்நாட்டு விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
குறித்த தீர்மானமானது அண்மையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் நடந்த ஒரு சிறப்பு கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், விமான நிலைய வசதிகளை முடிந்தவரை விரிவுபடுத்தவும், சர்வதேச விமான நிறுவனங்களை நமது விமான நிலையத்திற்கு அழைக்கவும் இந்த கலந்துரையாடலின் போது முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போதுள்ளவற்றுடன் குறைந்தது 20 செக்-இன் கவுண்டர்களையாவது சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, இதற்காக தேவையான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன் அடிப்படையில், 2028 ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு சுமார் 12 மில்லியன் விமானப் பயணிகளின் எண்ணிக்கையை எதிர்பார்க்கும் வகையில், அதற்குத் தேவையான ஆலோசனைகளை அமைச்சர் வழங்கினார்.