“அரசியல் பழிவாங்கல் வேட்டை மூலம் எமது பயணத்தைத் தடுக்க முடியாது.” – இவ்வாறு தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“கிராம மட்டத்திலிருந்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் எமது அரசியல் பிரச்சாரப் பணி ஆரம்பமாகும். கிராம மட்டத்திலான எமது ஆதரவாளர்களுடன் முதலில் சந்திப்பு நடத்தப்படும். அதன்பின்னர் அரசியல் குழுக்கள் மற்றும் கட்சிகளுடன் பேச்சு நடத்தப்படும்.
முறைமை மாற்றம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், பழைய பாதையிலேயே பயணிக்கத் தொடங்கியுள்ளனர். அரசியல் பழிவாங்கல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர். அதன்மூலம் எமது அரசியல் இயக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது. அரசியல் பழிவாங்கல் வேட்டைக்கு முகங்கொடுத்து நாம் பழகிவிட்டோம். எம்மைச் சிறையில் அடைத்தாலும் கட்சியின் பணி தொடரும்.
எமது அம்மா, அப்பாவை எமக்குப் பார்த்துக்கொள்ள முடியும். நாம் அயல்வீட்டார்களிடம் உள்ளாடை வாங்கி அணிவதில்லை. ஆனால், எம்மிடம் பாதுகாப்புப் படை இல்லை. எனவே, எனது அப்பாவுக்கு முன்னாள் ஜனாதிபதிக்குரிய பாதுகாப்பை அரசுதான் வழங்க வேண்டும். அரசமைப்பின் பிரகாரம் உள்ள ஏற்பாடுகள் வழங்கப்பட வேண்டும். அதனை மீறும் வகையில் செயற்பட முடியாது.” – என்றார்.