கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவின் விமலசிறி டி மெல் மாவத்தை பகுதியில் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பொலிஸ் விசேட அதிரடிப் படையின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவினரால் நேற்று (24) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளை, சேனாநாயக்க மாவத்தையைச் சேர்ந்த 29 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் விசேட அதிரடிப் படையின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், போதைப்பொருள் உள்ளிட்ட பெருமளவிலான சொத்துக்களுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 03 கிலோ 349 கிராம் ஹேஷ் போதைப்பொருள், 25 கிராம் குஷ் போதைப்பொருள், 30 கிராம் மென்டி போதைப்பொருள், 320 போதை மாத்திரைகள், 129 போதை முத்திரைகள், 01 வாயு கைத்துப்பாக்கி, 02 வாள்கள், 01 பொலிதீன் சீலர், 05 மின்னணு தராசுகள், போதைப்பொருளை பொதியிட பயன்படுத்தும் 4,000 பெக்கெட்டுகள், 1,250 ரூபாய், கைப்பேசி ஒன்று, மோட்டார் வாகனம் ஒன்று என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
விசாரணையில், சந்தேக நபர் ஒரு போதைப்பொருள் வியாபாரி என்பதும், தடுப்புக் காவலில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் வழிகாட்டுதலின் கீழ் போதைப்பொருளை விநியோகித்து வருவதும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.