முப்படைகள் மக்களின் காணிகளை அபகரிக்கும் விடயத்தை ஒழிக்க வேண்டும் எனவும், இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைக்கு அழைத்த விடயத்தைத் தாம் வரவேற்பதாகவும் கூறினார்.
கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் அரசு முன்னெடுத்துவரும் நல்ல விடயங்களுக்குத் தாம் ஆதரவு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற அமர்வில் நேற்று வியாழக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும்போதே செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“முன்னாள் ஜனாதிபதிகளின் வாசஸ்தலங்கள் தொடர்பில் அரசு எடுத்திருக்கும் தீர்மானங்களை நாம் வரவேற்கின்றோம்.
இவ்வாறான அரசின் செயற்பாடுகள் தொடர்ந்தும் நடைபெற வேண்டும். எதிர்வரும் தேர்தலுக்கான யுக்தியாக இந்த விடயங்கள் அமைந்து விடக்கூடாது.
தூய்மையான ஒரு திட்டத்தை முன்னெடுக்கும் அரசு பலதரப்பட்ட விடயங்களில் கவனம் செலுத்தும்போதே இந்தத் திட்டத்தில் வெற்றியடைய முடியும்.
வடக்கு, கிழக்கில் உள்ள மக்களின் காணிகளை முப்படையினர் அபகரித்துள்ளனர். எனவே, முப்படைகள் மக்களின் காணிகளை அபகரிக்கும் விடயத்தை ஒழிக்க வேண்டும். இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்.
இவற்றை நடைமுறைப்படுத்துமிடத்து கிளீன் ஸ்ரீலங்கா எனும் திட்டம் மேலும் வளர்ச்சியடையும்.” – என்றார்.