அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு இடையிலான மாவட்ட ஒருங்கிணைப்பு கலந்துரையாடலானது மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. க. ஸ்ரீமோகனன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (23.01.2025) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியஅரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், 2024 ஆம் ஆண்டில் அரச சார்பற்ற நிறுவனங்களினால் ரூபா 983 மில்லியன் பெறுமதியான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும், இதுவரை 2025ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களால் நடைமுறை ப்படுத்த ரூபா 568 மில்லியன் பெறுமதியான திட்டங்கள் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும், குறைநிரப்பு வேலைகளை நிரப்புவதற்காகவே அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்பட்டு வருவதாகவும், ஆனால் பிரதேச செயலகங்களுக்கு இடையில் ஒதுக்கீடுகளில் வேறுபாடுகள் காணப்படுவதனால் இத் திட்டங்களை இரண்டு வாரங்களில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களையும் அழைத்து மீள ஆராய்ந்து இறுதித் தீர்மானம் எடுக்கலாம் எனவும் தெரிவித்தார்.
மேலும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைய குறிப்பாக “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்திற்கு அமையவும் அரச சார்பற்ற நிறுவனங்களின் திட்டங்களையும் உள்வாங்கி “செழுமையான நாடு அழகான வாழ்க்கை” என்ற கொள்கைக்கமைய அனைவரும் வினைத்திறனாக செயற்படுவோம் எனத் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், அரச சார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட இணைப்பாளர், சர்வதேச அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், உள்ளூர் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள்.