இலங்கை நாட்டுக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா ( Akio ISOMATA) மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (21) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தில் JICA மற்றும் UNDP திட்டங்களின் தளங்களை நேற்றும் (20,21) இன்றும் ஜப்பானிய தூதர் பார்வையிட்டார், மேலும் அங்கு பல சிறிய நீர்ப்பாசன திட்டங்களை பார்வையிட்டதாகவும் கூறினார்.
இலங்கை அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் (Clean Sri Lanka) திட்டத்திற்கு தூதுவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்ததோடு, ஜப்பானிய அரசாங்கம் அதற்கு முழு ஆதரவையும் வழங்கும் என்றும் கூறினார்.
அதன்படி, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு 28 குப்பை சேகரிக்கும் ட்ரக்டர் வண்டிகளை நன்கொடையாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 8 ட்ரக்டர் வண்டிகள் கிழக்கு மாகாணத்திற்கு வழங்கப்படும் எனவும் தூதுவர் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கம் தூய்மையான இலங்கை திட்டத்தின் கீழ் இலங்கையை ஒரு புதிய பாதையில் கொண்டு செல்வதற்கான மனப்பான்மை, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், கிழக்கு மாகாணம் சமூகங்களிடையே ஒற்றுமை மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளதாகவும் மாகாணத்தின் அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் கவனம் செலுத்தி அவற்றை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல விரும்புவதாகவும் ஆளுநர் இதன் போது கூறினார்.