கண்டி மஹியாங்கனை பிரதான வீதியில் மயிலப்பிட்டி கீழ்பிரிவு பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி உயிரிழந்ததோடு, மேலும் மூவர் படுங்காயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கட்டுகஸ்தோட்டை பகுதியிலிருந்து மாரக்ஷன உடுதெனிய பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும், மயிலப்பிட்டி பகுதியிலிருந்து கண்டியை நோக்கி சென்ற பாடசாலை சேவை பேருந்து ஒன்றும் நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரில் 18 வயது மதிக்கதக்க மகள் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததோடு, தந்தை, மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி ரிகலகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு, மேற்படி உயிரிழந்த யுவதியின் சடலம் மாரஸ்ஸன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த முச்சக்கரவண்டி முன்னே சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளையிலேயே எதிரே வந்த பேருந்துடன் மோதியதன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
எனினும் இவ்விபத்துக்கு காரணமாக இருந்த பேருந்தின் சாரதியை தலாத்துஓயா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலாத்துஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.