அம்பாந்தோட்டை துறைமுகத்தை அன்று புனரமைத்தபோது சீனாவுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களை முன்வைத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இன்று அதே துறைமுகத்துக்காகச் சீனாவிடமிருந்து பெரும் முதலீட்டைப் பெற்றுள்ளார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அம்பாந்தோட்டை துறைமுகத்தை நாம் நிர்மாணித்தபோது, இன்றைய ஜனாதிபதி அநுர அன்று கடும் விமர்சனங்களை முன்வைத்தார். சீனாவின் கொலணியாக இலங்கையை மாற்றுவதற்கு நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என்றும் விமர்சித்தார். ஆனால், இன்று அதே துறைமுகத்துக்காகச் சீனாவிடம் இருந்து மிகப்பெரியதொரு முதலீட்டை அவர் கொண்டுவந்துள்ளார். இது மகிழ்ச்சியளிக்கின்றது.
நாட்டுக்கு வெளிநாட்டு முதலீடுகள் வருவதை நாம் வரவேற்கின்றோம். அநுர அரசு ஆட்சிக்கு வந்து 100 நாள்கள் கடந்துவிட்டன. ஆனால், அபிவிருத்தித் திட்டங்கள் இன்னும் ஆரம்பமாகவில்லை.” – என்றார்.