ஈழத்து நாடகத்துறையின் பிதாமகரும், நாடக அரங்கக் கல்லூரியின் நிறுவுனரும், நாடகப் பேராளுமையான கலாநிதி குழந்தை.ம.சண்முகலிங்கம் ஐயாவின் மறைவு, இந்த மண்ணின் நாடகத் துறையின் பேரிழப்பாகப் பதிவாகியிருக்கிறது.
முத்தமிழ்க் கலைகளுள் முதன்மையானதாகப் பார்க்கப்படும் நாடகக் கலையை, ஈழத்துப் பாரம்பரியத்தோடும், கூத்துக் கலை மரபோடும் கட்டிறுக்கமாகப் பிணைத்து அரங்க நாடகத் துறையில் புதுமையும், பேரெழுச்சியும் மிக்க ஈழத்து நாடகப் பாரம்பரியத்தை உருவாக்கிய இவரை, ஈழ நாடகத் துறையின் ‘பிதாமகர்’ எனப் போற்றுதல் சாலப் பொருந்தும்.
ஒரு நடிகராக, நாடக எழுத்தாளராக, நெறியாளராக, பன்மொழிப் புலமையாளராக என பலநிலைப்பட்ட ஆளுமைப் பேரொளியாக தனக்கான தனிமனித அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள், நாடக அரங்கக் கல்லூரியை உருவாக்கி, ஈழத்தின் நாடகப் பாரம்பரியத்தை முறைமைப்படுத்தப்பட்ட கல்விப் போதனை ஊடாக அடுத்த தலைமுறைக்கு கையளிக்க முனைந்ததன் விளைவாக, ஈழத்து நாடகப் பாரம்பரியத்துக்கும் அதனையே தமது துறையாக வரித்துக் கொண்ட நாடக ஆளுமைகள் பலருக்கும் அடையாளம் தந்த கனதிமிக்க கலைப்பணியை செவ்வனே ஆற்றியிருக்கிறார். ஒரு ஆசிரியராகவும், விரிவுரையாளராகவும், நாடக நெறியாளராகவும் அவரிடத்தே இருந்த கலைப் போதனைப் பண்பு ஈழ நாடகத் துறையின் அடுத்தடுத்த வளர் நிலைக்கு வழிகோலியது என்பதை மறுப்பதற்கில்லை.
அன்னையிட்ட தீ, மண் சுமந்த மேனியர், வேள்வித் தீ, எந்தையும் தாயும், ஆர்கொலோ சதுரர் உள்ளிட்ட அழியாப் புகழ் மிக்க நாடகங்களின் வழியும், தன் உதிரத்தில் உறைந்த நாடகக் கலையை ஊட்டி அவர் உருவாக்கிய அடுத்த சந்ததியின் நாடக ஆளுமைகளின் முகமாகவும் கலாநிதி குழந்தை.ம. சண்முகலிங்கன் தன் மறைவின் பின்னும் இந்த உலகில் ஒளிர்வார்.
அன்னாருக்கு எம் புகழ் அஞ்சலிகள்.
சிவஞானம் சிறீதரன்.
நாடாளுமன்ற உறுப்பினர்,
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்,
கிளிநொச்சி.