முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான ” தூய்மையான இலங்கை”(Clean Sri Lanka) தொடர்பில் தெளிவூட்டல் கருத்தரங்கு இன்றையதினம் (15) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது ” ஒரு செழிப்பான தேசம் ஒரு அழகான வாழ்க்கை” என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) திட்டம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களால் தெளிவுபடுத்தப்பட்டது.
இந்தக் கருத்தரங்கின் முக்கிய நோக்கமாக அரச உத்தியோகத்தர்களுக்கு ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) திட்டம் பற்றியும் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது பற்றியும் தெளிவூட்டுவதுடன் ‘தூய்மையான இலங்கை’ திட்டத்தை செயற்படுத்துவதில் அரச உத்தியோகத்தர்களின் வகிபாகம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ‘தூய்மையான இலங்கை’ திட்டத்தை திறப்பட மேற்கொள்வதற்கான வழிமுறைகள் என்பதாக அமைந்தது.
மேலும் ‘தூய்மையான இலங்கை’ திட்டத்தின் முக்கிய தூண்களான சமூகம்(Social), சுற்றுச்சூழல் (Environmental), நெறிமுறை(Ethical), சார்ந்து நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரச உத்தியோகத்தர்கள் தங்களது அர்ப்பணிப்பான பங்களிப்பை வழங்கி ‘ஒரு செழிப்பான தேசம்- ஒரு அழகான வாழ்க்கை” என்ற இலட்சியத்தை அடைவதற்கு தயாராக வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அரசாங்கத்தின் முக்கிய உத்திகளான (Alleviation of Rural Poverty) கிராமப்புற வறுமை ஒழிப்பு (Digital Economy ) டிஜிட்டல் பொருளாதாரம், தூய்மையான இலங்கை (Clean Sri Lanka )_ ஆகியவை தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், மாவட்ட பிரதம கணக்காளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், கிளைத் தலைவர்கள் முதலானோர் கலந்து கொண்டிருந்தனர்.