திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் உள்ள தாயிப் நகர் கோயிலடி வைத்தியசாலை வீதியே இவ்வாறு இடை நடுவில் மோசமடைந்து காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதியானது முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய அரசாங்கம் ஊடாக அபிவிருத்தி செய்யப்பட்டது.
குறித்த வீதியானது காபட் இடப்பட்ட போதும் ஒரு பகுதியில் பாரிய குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இவ் வீதி அண்மையில் ஏற்பட்ட கன மழை காரணமாக உடைந்து மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது .இதனால் இவ் வீதி ஊடாக போக்குவரத்து செய்வதில் மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
சுமார் 4 கிலோ மீற்றர் தூரம் கொண்ட இவ் வீதி ஊடாக தினமும் பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், அரச ஊழியர்கள் உட்பட பலரும் பயன்படுத்தி வருகின்றனர். காபட் இடப்பட்ட போதிலும் திட்டமிடப்படாத அபிவிருத்தியால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
வீதி அபிவிருத்தி அதிகார சபை மூலமாக மேற்கொள்ளப்பட்ட குறித்த வீதி தொடர்பில் தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முன்னாள் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எச் தாலிப் அலியால் இது தொடர்பில் முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் ஒருவர், குறித்த வீதியில் சிறிய பாலம் ஒன்று அமைக்கப்படல் வேண்டும் என்றார். இருந்த போதிலும் பல வருடகாலமாக உரிய சபை பொடுபோக்காக காணப்படுவது வருத்தமளிப்பதுடன் இதனை புதிய தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் விரைவில் பூரணமாக திறம்பட செய்து தருமாறு பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.