வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவான் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்டுள்ள பதாகையை அகற்றக்கோரி வெருகல் பிரதேச செயலகத்திற்கு முன்னால் மக்கள் இன்று (08) கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
“1 KM வட்டவான் தொல்லியல் நிலையம்” என குறிப்பிட்டு குறித்த பதாகை நடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மத்தியில் இது பெரும் பரபரப்பையும், விசனத்தையும் ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் எவ்வளவு பகுதி தொல்லியலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது? அதற்காக வர்த்தமான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதா? எதிர்காலத்தில் அப்பகுதியில் புத்த விகாரை வருமா? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனை தடை செய்யுமாறு கோரி குறித்த கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
அநுர ஆட்சியிலும் அபகரிப்பா? தொல்லியல் காணியில் விகாரை கட்டப்படாத இடம் உண்டா? அடுத்து புத்தர் சிலையா? பௌத்த விகாரையா? போன்ற வாசகங்களை ஏந்தியவாறும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.





