புதிய அரசமைப்பு விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து இணக்கப்பாட்டை மேற்கொள்வதற்கான சந்திப்பை எதிர்வரும் 25 ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு இடையில் நடந்த சந்திப்பில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில்,
“இதுவரை நாங்கள் மூன்று தரப்பும் தனித்தனியாகச் சந்தித்து வந்த கட்டத்தில் இந்தத் தரப்புக்களை ஒன்றாகச் சந்தித்து இணக்கப்பாட்டை எட்ட எண்ணியுள்ளோம். இந்த மூன்று கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் அந்தந்தக் கட்சிகள் இந்த முயற்சிக்கு யாரைக் கொண்டுவரவேண்டும் என்று விரும்புகின்றனவோ அவர்கள் அந்தத் தரப்புகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.
இந்தச் சந்திப்பு ஓர் ஆக்கபூர்வமான சந்திப்பாக அமைய வேண்டும். இந்த மூன்று தரப்புகளுக்கும் கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய ஆணையை வழங்கியுள்ள நிலையில் அந்த ஆணையை முழுமையாகப் பிரதிபலிக்கக்கூடிய ஒரு பொது நிலைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு தேவைப்படும் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தும் நோக்கோடுதான் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.” – என்றார்.