கம்பளை பிரதேசத்தில் உள்ள மின்சாரக் கம்பிகளை வெட்டி மின்சார சபைக்கு சுமார் 13 இலட்சம் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக கூறப்படும் இலங்கை மின்சார சபை ஊழியர் ஒருவர் கம்பளை பொலிஸாரால் திங்கட்கிழமை (06) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் நுவரெலியா மின்சார சபையில் பராமரிப்பு பிரிவு ஊழியரான கம்பளை மரியவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபர் மின்சார சபை ஊழியர் பிரிவைச் சேர்ந்த சீருடையில் பல்வேறு பிரதேசங்களுக்குச் சென்று இவ்வாறு மின்சார கம்பிகளை வெட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பளை டாட்ரி பகுதியிலும், கொத்மலை வீதியிலும் மின்சார கம்பிகள் வெட்டப்பட்டுள்ளதாக கம்பளை மின்சார சபை பராமரிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, அப்பகுதிகளில் உள்ள சிசிரிவி கமராக்களை சோதனையிட்ட போது சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடமிருந்து 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான மின்சாரக் கம்பிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.