2025 ஆம் ஆண்டுக்கான முதல் வார நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும் நிலையில், முக்கிய சில விடயங்கள் தொடர்பில் சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை சபை அமர்வுகள் இடம்பெறவுள்ளன.
இதன்போது உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் துறைசார் அமைச்சரால் முன்வைக்கப்படவுள்ளது.
அத்துடன், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயம் மற்றும் சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ள விஜயம் என்பன பற்றியும் எதிரணிகள் கேள்விகளை எழுப்பவுள்ளன.
இன்று மத்திய வங்கி நிதி நிலை அறிக்கை தொடர்பிலும் விவாதிக்கப்படவுள்ளது.
நாளை மறுதினம் வியாழக்கிழமை ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முன்வைக்கப்படவுள்ளது.
அரிசி தட்டுப்பாடு, சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு உள்ளிட்ட விடயங்களால் அரசு மீது எதிரணிகள் சரமாரியாக விமர்சனக் கணைகளைத் தொடுத்து வருவதால் அரசியல் பரபரப்புக்கு மத்தியிலேயே சபையும் கூடுகின்றது.