அரச நிறுவனங்கள் மக்களுக்கானதாக இருக்க வேண்டுமே தவிர மக்களின் சுமைகளாக இருக்கக் கூடாது. அது போலவே மின்சார சபையும் மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என்பது மக்களது எதிர்பார்ப்பாக உள்ளது என WCAN வலையமைப்பின் தேசிய மட்ட தமிழ் பிரிவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் மகளிர் செயற்பாட்டாளருமான திருமதி அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்துயுள்ளார்.
மின்சார கட்டண திருத்த முன்மொழிவு தொடர்பான வடக்கு மாகாணத்தின் பொதுமக்களின் ஆலோசனை கேட்கும் கூட்டம் இன்று (06.01.2025) யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்துக்கூறிய அவர் மேலும் கூறுகையில் –
மக்களின் அடிப்படை தேவைகளான உணவு உடை உறையுளுடன் இன்று மின்சாரமும் ஒன்றாக இணைந்துள்ளது.
அதனடிப்படையில் யாழ் மாவட்டத்தை பொறுத்தளவில் மின்சார கட்டண அதிகரிப்பால் சாதாரண மக்கள் முதல் சிறு தொழில் முயற்சியாளர்கள் ஏன் பல நிறுவனங்கள் கூட அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாண மக்களில் அதிகமோனோர் வறுமை மட்டத்தில் குறிப்பாக அரசின் சலுகைகளை நம்பியே இன்றும் பலர் வாழ்ந்து வருகின்றனர்.
வீடுகளை கட்டுவதற்குக் கூட அரசின் உதவித் திட்டங்களை நம்பியே இருக்கின்ற நிலையில் உள்ளனர்.
கொடுக்கப்பட அந்த வீடுகள் கூட இன்னமும் முழுமையாக்க முடியாத நிலையில் கடனாளிகளாக இருக்கின்றனர்.
இந்நிலையில் எவ்வாறு அவர்கள் மின் இணைப்பை பெறுவது?
இதேநேரம் மின்சரக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
இதனிடையே அதிகரித்த மின் கட்டணத்தால் தொழில் துறைகள் குறைகின்றது. அல்லது மூடப்படுகின்ற நிலையில் உள்ளது.
அதுமட்டுமல்லாது வாழ்வாதாரத்துக்கே அல்லற்படும் பல வறிய குடும்பங்கள் மின்சார இணைப்பை இழக்கும் நிலையும் ஏற்படுகின்றது.
இவ்வாறான போக்கை வறிய மக்களால் ஜீரணிக்க முடியாதுள்ளது.
இதேவேளை 2022 முன்னர் ஓரளவு சாதகமான நிலையில் இருந்த மின் கட்டணம் நாட்டிலேற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னர் தற்போது சடுதியாக மும்மடங்கு உயர்ந்துள்ளது.
அதுமட்டுமல்லாது மின்சார சபையின் அனைத்து இழப்புக்களும் மக்களின் முதுகில் சுமத்தப்பட்டுள்ளது.
இதனால் சிறு தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மக்கள் குறிப்பாக பெண்களை தலைமையாகக் கொண்ட குடும்பங்கள் முன்னெடுத்து வரும் தொழில் துறைகள் பாரிய பின்னடைவு அல்லது இழுத்து மூடும் நிலை உருவாகின்றது.
இந்நிலையில் மக்களின் மீது சுமத்தப்பட்டுள்ள மின்சார கட்டணங்கள் குறைக்கப்படுவது அவசியமாகும்.
இதே நேரம் மின்சார சபையும் ஒரு அரச நிறுவனம் தான்.
இந்த நிறுவனத்துக்கும் மக்கள் மீதும் மக்களின் நலன்களிலும் அக்கறை இருப்பது அவசியம்.
வருடாந்தம் அதிக வருமனத்தை ஈட்டும் நிறுவனமாகவும் ஊழியர்களின் நலன்களுக்காகவும் அல்லாது மக்களின் சுமையை குறைக்கவும் மின்சார சபை தன்னை மாற்றிக்கொள்ள முன்வரவேண்டும். இதற்கு இந்த பொதுப் பயன்பாடு ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.